

விசாகப்பட்டினம்: ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பல் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.
இந்தியக் கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் விதமாக, நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஐஎன்எஸ் தாராகிரி உருவாக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இந்தப் போர்க்கப்பலை கடற்படையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இணைத்து வைத்தார்.
இந்த விழாவில் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மும்பையிலுள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட தாராகிரி, ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உருவான 6,670 டன் எடையுள்ள வலிமைமிக்க போர்க்கப்பலாகும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இந்தத் திட்டத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாராகிரி உருவாக்கத்துக்கு பங்களிப்பு செய்துள்ளன.
முந்தைய வடிவமைப்புகளைக் காட்டிலும் முன்னேறிய தொழில்நுட்பத்தைக் கொண்ட இக்கப்பல், ரேடார்களின் பார்வையில் படாமல் தப்பிக்கும் வசதியைக் கொண்டது. எதிரி நாடுகளின் ரேடார்களுக்குத் தெரியாமல் கடல் பரப்பில் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் திறன் இந்த கப்பலுக்கு உண்டு.
இக்கப்பல் அதிவேகமாகவும், நீண்ட தூரம் பயணிக்கும் திறனுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலியை விட வேகமான சூப்பர்சோனிக் ஏவுகணைகள், நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கும் கருவிகள் இதில் உள்ளன.
போர்க்களத்தில் நொடிப் பொழுதில் முடிவெடுக்க உதவும் நவீன ‘காம்பாட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' மூலம் ஆயுதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மாறிவரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தாராகிரி போர்க்கப்பலின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளதாக ராஜ் நாத் சிங் தெரிவித்து உள்ளார்.