

லக்னோ: பிரிட்டனைச் சேர்ந்த டேவ் ஃப்ளூ என்பவர் தனது மனைவிக்கு செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎப்) சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். அவர் உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்தைவிட இந்தியாவில் மருத்துவ சிகிச்சை விரைவாகவும், குறைந்த செலவிலும் கிடைப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டேவ் ஃப்ளூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் “இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு இங்கிலாந்தை விடச் சிறந்தது. நானும் எனது மனைவியும் லக்னோவில் உள்ள மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஐவிஎப் சிகிச்சை பெற்று வருகிறோம். இங்கு கிடைத்த அனுபவம் எனக்குப் பல புதிய புரிதல்களை அளித்துள்ளது.
இங்கிலாந்தில் எக்ஸ்-ரே பரிசோதனை அறிக்கையைப் பெற ஒருமாதம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்குள் அறிக்கை கிடைத்துவிடுகிறது. குறித்த நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகளுக்கான சந்திப்பு கிடைப்பது மட்டுமல்லாமல், ஒரே கட்டடத்தில் பல்வேறு பரிசோதனைகளை செய்துகொள்ள முடிகிறது. இத்தகைய வசதிகள் கொண்ட மருத்துவமனையில், குறைந்த செலவில் இவ்வளவு விரைவாக சிகிச்சை பெற முடிவதை என்னால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொலியை 1.68 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு லைக் செய்து, பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். “10 நிமிடங்களில் முடிக்கக்கூடிய எக்ஸ்-ரே அறிக்கைக்காக ஒரு மாதம் ஏன் காத்திருக்க வேண்டும்?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், “இதைக் கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் வீட்டுவேலை உதவி, மருத்துவ சிகிச்சைகள் குறைந்த செலவில் கிடைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.