இந்திய விஞ்ஞானி அசோக் சென்
பெங்களூரு: இயற்பியல் துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான மதிப்புமிக்க ‘ஆஸ்கார் கிளைன்’ பதக்கத்தை இந்திய விஞ்ஞானி அசோக் சென் பெற்றுள்ளார்.
பெங்களூருவில் உள்ள சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையத்தின் (ஐசிடிஎஸ்) புகழ்பெற்ற இயற்பியலாளரும் பேராசிரியருமான அசோக் சென், இயற்பியல் துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான மதிப்புமிக்க ‘ஆஸ்கார் கிளைன்’ பதக்கத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம், இவ்விருதை பெறும் முதல் இந்திய இயற்பியலாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக ஐசிடிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐசிடிஎஸ்- இன்ஃபோசிஸ் மாதவா இருக்கை பேராசிரியரான அசோக் சென், எஸ்-டூவாலிட்டி, துல்லியமாகக் கணக்கிடும் கருந்துளை என்ட்ரோபி மற்றும் ஸ்டிரிங் ஃபீல்டு கோட்பாடு ஆகியவற்றில் ஆற்றிய முன்னோடிப் பணிகளுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் நவீன ஸ்டிரிங் கோட்பாட்டை வடிவமைக்க உதவியுள்ளன.
விருதின் ஒரு பகுதியாக, அக்டோபர் 22-ம் தேதி ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்குகளில் அசோக் சென் ‘நரம்பிசையிலிருந்து ஈர்ப்பு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து நரம்பிசை’ என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டிரிங் கோட்பாட்டுக்கு ஒரு ஒருங்கிணைக்கும் கட்டமைப்பை நிறுவியதில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, 2012-ல் அடிப்படை இயற்பியலுக்கான ‘பிரேக்த்ரூ’ பரிசையும், 2014-ல் டிராக் பதக்கத்தையும் அசோக் சென் பெற்றார். இது மட்டும் இன்றி இந்திய அரசு இவருக்கு பத்ம (2001) மற்றும் பத்மபூஷன் (2013) விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
‘ஆஸ்கார் கிளைன்’ சிறப்பு என்ன?
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் மற்றும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியின் நோபல் இயற்பியல் குழு இணைந்து 1988-ம் ஆண்டு முதல் ‘ஆஸ்கார் கிளைன்’ விருதை வழங்கி வருகிறது. தத்துவார்த்த இயற்பியல் மற்றும் அண்டவியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு இது வழங்கப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங், பீட்டர் ஹிக்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இவ்விருதை ஏற்கனவே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.