ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு - ஈரான் தூதருக்கு சம்மன்

ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு - ஈரான் தூதருக்கு சம்மன்
Updated on
1 min read

புது டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக கொடியுடன் சென்ற இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்திய மாலுமி கொல்லப்பட்டார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியது.

ஓமன் கடல் எல்லைக்குள் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் வழித்தடத்தில் சென்ற, மொம்பாசா மற்றும் அல் பஹியா சரக்கு கப்பல்கள் மீது ஈரான் குரூஸ் ஏவுகணைகள் தாக்கியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி கொல்லப்பட்டார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஆறு இந்தியர்கள் மற்றும் இரண்டு உக்ரேனியர்களும் அடங்குவர். காயமடைந்தவர்களில் நால்வர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஓமன் கடற்பரப்பில் நடந்த தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘பதற்றங்களை உடனடியாகத் தணிக்கவும், பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் திரும்பும் வகையில் ஒரு ராஜதந்திரத் தீர்வுக்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நாங்கள் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்.

இந்த பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க, பிராந்தியத்தில் உள்ள சர்வதேச நீர்வழிகள் வழியாக சுதந்திரமான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் கூடிய விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தது.

ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழந்தது குறித்து, ஈரான் தூதரகத்தின் துணை தூதர் முகமது ஜாவத் ஹொசைனி மற்றும் பிற ஈரான் உயர் அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில், அவர்கள் ஆஜராகி இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.

ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு - ஈரான் தூதருக்கு சம்மன்
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தடைந்தன - உயிர் தப்பியவர் அதிர்ச்சி பேட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in