

புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதோடு, வலுப்பெற்றும் வருகின்றன என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கவுடல்யா பொருளாாதர மாநாட்டில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “மாற்றங்கள் நிறைந்த காலத்தில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை இழக்காமல், அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளும் திறனுடனும், அடுத்த அதிர்ச்சி வரும்போது அதையும் சமாளிப்பதற்கான திறனையும் கொண்டிருக்கிறது.
இந்திய பொருளாதாரத்தின் மீள்திறன் என்பது, உண்மையில் நிகழாத விளைவுகளில் உள்ளது. அதாவது, வலுப்பெறாத பணவீக்கம், எரிபொருள் நிலையங்களில் உருவாகாத வரிசை, வெளிப்படாத வங்கி நெருக்கடி, திணிக்கப்படாத நிதிக் கொள்கை திருத்தம் ஆகியவற்றில் இருந்தே நமது பொருளாதார மீள்திறனை நம்மால் மதிப்பிடலாம்.
இத்தகைய எதிர்நிலை உண்மைகளும், முக்கிய வளர்ச்சி விகிதத்தைப் போலவே பொருளாதார வல்லுநர்களின் கவனத்துக்கு உரியவை.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட அதிர்ச்சிகளை, தனது அடிப்படைகள் சிதையாமல் இந்தியா சமாளித்துள்ளது. 2026-27ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் 4.82 சதவீதம். முதல் காலாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம். அந்நிய செலாவணி கையிருப்பு 766 பில்லியன் டாலர். இவை நமது பொருளாதார மீள்திறனைக் காட்டுகின்றன.” என தெரிவித்தார்.