தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
Updated on
3 min read

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிய உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது.

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 6,010 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், மற்ற வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர்கள் கல்லூரிகளில் பயிலும் போது மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப்படிப்பினைத் தொடர, மாதம் ரூ.2,000 வழங்கும் 'அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், இதுவரை 10,637 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,56,623 நபர்களுக்கு. வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் இதர நகர்ப்புரப் பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 59 நபர்களில் 52 நபர்கள், ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் ஆவர்.

தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.101 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பல்வேறு மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் 199 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களும், தொழில் முனைவோரும் பயன்படுத்தும் வகையில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 38 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடியும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,400 கோடியும், மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடியும், தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.1,996 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மின்னணு துறை உற்பத்தியில் 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது.

ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன.

நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக திமுக உள்ளது.

19.34 லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் ,

தமிழகத்தில் உள்ள 1048 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,363 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.8,100 கோடி செலவில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

சுற்றுலா துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வழங்கல், கடற்கரைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ.1,237 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். அப்போது. கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய ஒரு மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டப் பணிகள், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம், தற்போது 11,953 கிராம ஊராட்சிகளில் 95% முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம், நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் தொடர்புடைய திட்டங்களின் கீழ் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் மீள்உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

14.6 கி.மீ. நீளமுள்ள 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

திறமையான மாணவர்கள் உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க தொடங்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 385 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் தொழில்கள் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 4,948 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கு 420 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ. 16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் புனரமைப்பிற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசினார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
‘அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…’ - காங். எம்.பி மாணிக்கம் தாகூரின் சூசக பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in