

புதுடெல்லி: அகண்ட பாரதத்துக்கான வலுவான அடித்தளத்தை அமைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலுக்காக குஜராத்தின் ஏக்தா நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலை முன்பாக, ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் தேசிய பாதயாத்திரை நிறைவு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "சர்தார் வல்லபாய் படேல் 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்ததில் மிகப் பெரிய வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்டவர். அகண்ட பாரதத்துக்கான வலுவான அடித்தளத்தை அமைத்தவர். அவருக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்.
வலுவான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற படேலின் கனவு, பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் நனவாகி வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, ராணுவ ரீதியாக விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான நிலையான பயணத்தில் நாடு உள்ளது.
இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலத்தின் சக்தி மையம். ஒற்றுமை, ஒழுக்கம், தேசிய நோக்கம் ஆகியவற்றோடு அவர்கள் வழிநடத்தப்படும்போது, புதுமை மற்றும் வளர்ச்சியில் நாடு உலகிற்கே தலைமை தாங்க முடியும்.
போதைப் பொருட்களை நிராகரிப்பதில் இளைஞர்கள் உறுதியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் சைபர் பாதுகாப்புக்கு அவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு வலுவாக உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்து, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற முன்னெடுப்பை மத்திய அரசு உறுதியுடன் மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு பன்மடங்கு வலுப்பெற்றுள்ளது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் இந்தியாவுக்கு உள்ள உறுதியை ஆபரேஷன் சிந்தூர் மூலம் அது தீர்க்கமாக உணர்த்தியது" என தெரிவித்துள்ளார்.