டெல்லியில் டிச.10-ல் தொடங்குகிறது இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை!

டெல்லியில் டிச.10-ல் தொடங்குகிறது இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை!
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை வரும் 10-ம் தேதி டெல்லியில் தொடங்க இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரிக் ஸ்விட்சர் தலைமையிலான குழு இந்தியா வர உள்ளது. இக்குழு, இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமையிலான குழுவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை புதுடெல்லியில் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும்.

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதே இந்த சந்திப்புகளின் நோக்கமாக இருக்கும். இந்த வர்த்தக ஒப்பந்தம் பல கட்டங்களாக நிகழும் என்றும், இதன் முதல் கட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நவ. 28ம் தேதி FICCI-ன் ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராஜேஷ் அகர்வால், உலகலாவிய வர்த்தக நிலைமைகளில் மாற்றங்கள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைகள் கணிசமாக முன்னேறியுள்ளன. இந்த காலண்டர் ஆண்டுக்குள் ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று நாங்கள் மிகுந்த விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளுக்கு இணையான வரி விதிக்கப்படும் எனக் கூறிய அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார்.

இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியையும் 25% ஆக உயர்த்துவதாக அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்காக கூடுதலாக இந்தியாவுக்கு 25% வரியை ட்ரம்ப் விதித்தார். இதன்மூலம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை விதிக்கிறது.

அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக உள்ளது. இதை வரும் 2030-க்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. 14 நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements) ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆறு நாடுகளுடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் டிச.10-ல் தொடங்குகிறது இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை!
“எஸ்ஐஆரை தடுத்திருந்தால் மே.வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியிருக்கும்” - மம்தா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in