புதுடெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் புரிதல்களையே, இரு தரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பிரதிபலிக்கின்றன என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ‘‘இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும் வகையிலான இந்திய - அமெரிக்க இடைக்கால வர்த்தக கட்டமைப்பு குறித்த கூட்டறிக்கை கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.
கூட்டறிக்கையே இவ்விஷயத்தில் இரு நாடுகளின் பரஸ்பர புரதலுக்கான அடிப்படையாகும். அமெரிக்காவின் fact sheet-ல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள், கூட்டறிக்கையில் உள்ள பகிரப்பட்ட புரிதல்களை பிரதிபலிக்கின்றன. இந்த இடைக்கால ஒப்பந்த கட்டமைப்பை இறுதி செய்வதற்கு தற்போது இருதரப்பும் பாடுபடும்’’ என தெரிவித்தார்.
மாற்றங்கள் என்ன?: பருப்பு உற்பத்தியில் இந்தியா உலகளவில் பெரிய நாடாக உள்ளது. உலகளாவிய பருப்பு உற்பத்தியில் இந்தியா 25 முதல் 28 சதவீத இடத்தை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க பருப்புகள் மீது இந்தியா விதிக்கும் 30 சதவீத இறக்குமதி வரியை நீக்க வற்புறுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.
அமெரிக்கா முதலில் வெளியிட்ட வர்த்தக ஒப்பந்த விவரத்தில் பருப்புகள் மற்றும் அமெரிக்க வேளாண் பொருட்கள் பற்றி குறிப்பிட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா மாற்றியமைத்து வெளியிட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் பருப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்காவிடம் இருந்து 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் அளவிலான எரிசக்தி பொருட்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப பொருட்கள், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் சேவைகளை பெற இந்தியா உறுதி அளித்துள்ளதாக முதலில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் மாற்றி அமைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் வேளாண் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. உறுதி அளித்துள்ளது என்ற வார்த்தைக்கு பதிலாக உத்தேசித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.