

ஹைதராபாத்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி 20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 250 ரன்கள் இலக்கை துரத்தி சாதனை படைத்திருந்தது. தொடர்ந்து 3-வது ஆட்டத்தில் மீண்டு வந்த இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
இந்நிலையில் 4-வது ஆட்டம் இன்று இரவு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி டி 20 தொடரை கைப்பற்றும். இதனால் இந்திய அணி வீரர்கள் கூடுதல் முனைப்புடன் செயல்படக்கூடும். அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி கவனமுடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.
இருப்பினும் ஆட்டத்தின் முடிவை, இரு அணிகளிலும் உள்ள அதிரடி பேட்டர்களின் மட்டை வீச்சே மீண்டும் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியில் மிரட்டக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இதனால் நடுவரிசை பேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்படுவதில்லை.
எனினும் டாப் ஆர்டர் பேட்ட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாத பட்சத்தில், ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர் ஆகியோர் சவாலான சூழலைச் சமாளித்து உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, அதிக ரன்கள் இலக்கை விரட்டும் சூழலில் இவர்களின் பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
தரவரிசையில் பின்தங்கியிருந்தாலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தத் தொடரில் இந்தியாவுக்கு கடும் சவால் அளித்து வருகிறது. இருப்பினும், நடப்பு உலக சாம்பியனான இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டுமானால், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்.
அதேவேளையில், இந்திய பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்புடன் செயல்படுவது அவசியம். ஏனெனில், பெரிய அளவிலான இலக்கை விரட்டிப் பிடிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதை மேற்கு இந்தியத் தீவுகள் பேட்டிங் வரிசை ஏற்கெனவே நிரூபித்துள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் இந்த மைதானத்தில் 7 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 209 ரன்களாக இருந்தது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒன்றாக விளையாடும் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தங்களுக்குப் பரிச்சயமான ஹைதராபாத் மைதானத்தில் விளையாடுவது கூடுதல் சாதகமாக இருக்கும். ஹைதராபாத் மைதானத்தில் இந்திய அணி கடைசியாக 2024-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டி 20 ஆட்டத்தில் விளையாடியது.
அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இமாலய இலக்கை துரத்திய வங்கதேச அணி 164 ரன்களே சேர்த்தது. இதனால் இந்திய அணி133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும்.