

வினய் மோகன் குவாத்ரா | பிரமிளா ஜெயபால்
வாஷிங்டன்: இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடவடிக்கையின்போது 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அமெரிக்க ஜனநாயகக் கட்சி எம்.பி. பிரமிளா ஜெயபால் நேற்றுமுன்தினம் கவலை தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரமிளா ஜெயபாலின் கருத்துக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தேர்தல் மற்றும் அரசியல் நடைமுறைகள் குறித்து பிரமிளா ஜெயபால் வெளியிட்டுள்ள கருத்துகள், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடாகும். இது கடும் கண்டனத்துக்குரியது.
மேலும், இந்தியா துடிப்பான ஜனநாயக நாடு. வலுவான, சுதந்திரமான அரசியலமைப்பு அமைப்புகளையும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் நீண்டகாலப் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. பிரமிளா ஜெயபாலின் தவறான புரிதல்களைப் போக்குவதற்காக அவருடன் ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.