அமெரிக்கா தலைமையிலான ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

அமெரிக்கா தலைமையிலான ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா முறைப்படி இணைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

குறைக்கடத்தி உற்பத்தி முதல் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு வரை சிலிக்காண் அடுக்கைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ள நம்பகமான நாடுகளின் கூட்டமைப்பாக பாக்ஸ் சிலிக்கா கருதப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வெளிப்படையானதாகவும், ஜனநாயக சமூகங்களால் நிர்வகிக்கப்படுவதாகவும் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த கூட்டமைப்பில் இந்தியா இன்று முறைப்படி இணைந்தது. டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி, சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அஸ்வினி வைஷ்ணவ், ‘‘செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு உச்சி மாநாட்டை மட்டும் நாங்கள் நடத்தவில்லை. எதிர்காலத்தை நாங்கள் கட்டமைக்கிறோம். இளைய தலைமுறையினருக்கு புதிய அடித்தளங்களும் புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. 1947 முதல் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்தால், கூட்டு வளர்ச்சியின் தாக்கத்தை நாம் அனைவரும் உணரலாம். இன்று இந்தியாவின் திறமையான பொறியாளர்கள் உலகின் மிகவும் மேம்பட்ட இரண்டு நானோ மீட்டர் சில்லுகளை வடிவமைக்கிறார்கள். குறைக்கடத்தி தொழிலுக்கு சுமார் 10 லட்சம் புதிய நிபுணர்கள் தேவைப்படும். இது இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு’’ என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜேக்கப் ஹெல்பெர்க், ‘‘இது காகிதத்தில் உள்ள ஒரு ஒப்பந்தம் அல்ல. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான ஒரு வரைபடம் இது. இரு நாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டவை. இன்று நாங்கள் பாக்ஸ் சிலிக்கா பிரகடனத்தில் கையெழுத்திடம்போது, சார்பு நிலையை நாங்கள் மறுக்கிறோம், மிரட்டலை நாங்கள் மறுக்கிறோம். பொருளாதார பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

பூமியின் ஆழமான கனிமங்களையும், ஆய்வகங்களில் உள்ள சிலிக்கான் செதில்களையும், மனித ஆற்றலை வெளிக்கொணரும் உளவுத்துறையையும் நாங்கள் பாதுகாக்கிறோம். பாக்ஸ் சிலிக்கா என்பது எதிர்காலத்தை உருவாக்குபவர்களுக்கு சொந்தமானது’’ என்று தெரிவித்தார்.

இந்த கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, கத்தார், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. அதேநேரத்தில், கனடா, நெதர்லாந்து, ஐரோப்பிய யூனியன், தைவான் ஆகிய நாடுகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா தலைமையிலான ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!
“உலகுக்கு இந்தியா தலைமை வகிக்கும்” - டெல்லி மாநாட்டில் ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in