

புது டெல்லி: “இந்தியா மீண்டும் 'விஸ்வ குரு' என்ற உலகின் தலைமை இடத்தைப் பெற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்; இது ஒவ்வொரு குடிமகனின் உறுதியாகவும் இருக்க வேண்டும்” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக புதுடெல்லியின் ரோகினியில் நடைபெற்ற ‘ராஷ்ட்ர வந்தனம்’ நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய மோகன் பாகவத், “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு சமூகம் அர்ப்பணிப்புடன் இருப்பதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பு.
தேசம் முழுவதும், பாரதத்தின் ஆன்மா உள்ளிருந்து விழித்துக் கொண்டிருக்கிறது. உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட தனிநபர்களால் வழிநடத்தப்படும் கூட்டுப் பலம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச அரங்கில் அதன் நிலையை நோக்கி செலுத்தப்பட வேண்டும்.
எனவே, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியிலும், உலக அரங்கில் இந்தியாவுக்கான சரியான இடத்தைப் பெறுவதற்கும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதை உறுதி செய்வது நம் அனைவரின் கடமையாகும். சங்கம் இந்த நோக்கங்களை அடைவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது, அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நான் 3 நாடுகளுக்குச் சென்றபோது, தொடர்ச்சியான எதிர்மறைப் பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், சாமானியர்கள், பொருளாதாரத்தை இயக்குபவர்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களின் தலைவர்கள் மத்தியில் இந்தியாவைப் பற்றிய வியப்பு, பெருமை மற்றும் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதை நான் கவனித்தேன்.
நாட்டின் இளைஞர்கள் இந்தியா உலகின் முதன்மையான நாடாக மாற வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் 'தேசமே முதன்மை' என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். சேவை என்பது ஒரு தொழில் அல்ல, அது சமூகத்தின் மீதான பொறுப்பு
ஒவ்வொரு இந்தியரும் ஒன்றே என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்; ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் இந்தியன் எனும் உணர்வு எழுச்சி பெற்று வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மேற்கத்திய அறிஞர்கள் இந்தியா நிலைத்திருக்காது என்றும், நாட்டை நிர்வகிக்க மீண்டும் தங்களையே அழைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கருதினர்.
இந்தியா ஜனநாயகத்தை இவ்வளவு சிறப்பாகக் கட்டிக்காக்கும் என்றும், தனது பொருளாதாரத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக விரிவுபடுத்தும் என்றும் மேற்கத்திய நாடுகள் முன்னதாகக் கற்பனை கூடச் செய்திருக்கவில்லை.
இந்துக்களால் எவ்வாறு இவ்வளவு பொறுமையுடன் இருக்க முடிகிறது என்பதைக் கற்றுக்கொள்ள மேற்கத்திய நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. தங்கள் புதிய தலைமுறைக்காக இதைப் புரிந்துகொள்ள அவர்கள் விரும்புகின்றனர்.
எந்தவொரு விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படாமல், உண்மை மற்றும் நீதியின் பாதையில் பயணிப்பதே நமது உறுதிப்பாடு. இந்தியா மீண்டும் 'விஸ்வ குரு' (உலக குரு) என்ற இடத்தைப் பெற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்; இது ஒவ்வொரு குடிமகனின் உறுதியாகவும் இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.