“ஏஐ துறையில் இந்தியா பார்ப்பது அச்சத்தை அல்ல... எதிர்காலத்தையே!” - பிரதமர் மோடி

“ஏஐ துறையில் இந்தியா பார்ப்பது அச்சத்தை அல்ல... எதிர்காலத்தையே!” - பிரதமர் மோடி
Updated on
2 min read

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு மனிதகுல வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அத்தியாயமாக இருக்கும் என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதில் இந்தியா அச்சத்தைப் பார்க்கவில்லை என்றும், மாறாக எதிர்காலத்தையே பார்க்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியது: “மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கினரை கொண்டுள்ள நாடாகிய இந்தியாவில் உலகின் மிகப் பெரியதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய இளையோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப தொகுப்பின் தாயகமாகவும் விளங்கும் இந்தியா, தொழில்நுட்பம் சார்ந்த சூழல் அமைப்புக்காக பாடுபடுகிறது.

இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமின்றி, முன் எப்போதும் இல்லாத வேகத்துடன் அவற்றை ஏற்கவும் செய்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்கள், உலகளாவிய ஏஐ சூழல் அமைப்பின் தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை 140 கோடி இந்திய மக்களின் சார்பில் வரவேற்கிறேன். இந்தியாவில் இத்தகைய உச்சிமாநாடு நடைபெறுவது நாட்டுக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும் பெருமை சேர்க்கிறது.

உலகம் முழுவதிலும் இருந்து தலைசிறந்த நிபுணர்களின் பங்கேற்புடன் சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் வருகை தந்துள்ள இந்த உச்சி மாநாட்டின் வெற்றி, புதிய உச்சங்களைத் தொடும். இளைய தலைமுறையின் வலுவான பங்கேற்பு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு, வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி ஆகிய துறைகளில் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் புத்தாக்க திறன்களையும் இது வெளிப்படுத்துகிறது.

மனிதகுல வரலாற்றில் சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை திருப்பங்கள் ஏற்படும். அவை நாகரிகத்தில் புதிய திசைகளை ஏற்படுத்தும். கற்களில் இருந்து முதல்முறையாக தீப்பொறி உருவாக்கப்பட்டது. அந்த தீப்பொறி நாகரீகத்திற்கு அடித்தளமாக மாறும் என்று அப்போது எவரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். பேச்சுவழக்கில் இருந்த மொழி, எழுத்து வடிவத்துக்கு முதல்முறையாக மாறிய போது, எழுத்துப்பூர்வமான அறிவு, எதிர்கால அமைப்பு முறைகளுக்கு முதுகெலும்பாக மாறும் என்பதை எவரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். கம்பியில்லா சமிக்ஞை முறைகள் முதலில் உருவாக்கப்பட்ட போது, ஒரு நாளில் ஒட்டுமொத்த உலகமும் நிகழ்நேரத்தில் இணைக்கப்படும் என்பதை எவரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

அணுசக்தி கண்டறியப்பட்ட பின், அதன் அழிவு சக்தியையும், ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளையும் மனிதகுலம் கண்டது. இதேபோல், செயற்கை நுண்ணறிவும் மாற்றத்திற்கானது. சரியான திசையில் இது செல்லாவிட்டால், இடையூறுகளுக்கு வழிவகுக்கும்; சரியான திசையில் சென்றால் இது சிறந்த தீர்வாக இருக்கும். செயற்கை நுண்ணறிவில் இந்தியா அச்சத்தைப் பார்க்கவில்லை; மாறாக எதிர்காலத்தையே பார்க்கிறது. செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தை மையமாகக் கொண்டிருப்பதை விட, மனிதர்களை மையமாகக் கொண்டிருப்பது முக்கியம். இதற்கான கருத்துகளை உருவாக்குவதே உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம்.

அனைவருக்கும் நல்வாழ்வு, அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற உச்சிமாநாட்டின் மையப்பொருள் செயற்கை நுண்ணறிவு குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை தெளிவாக பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு அனைவரையும் உள்ளடக்கியதாக அதிகாரம் அளிப்பதற்கான ஊடகமாக இருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையாக மானவ் (M.A.N.A.V.) என்பதை இந்தியா முன்வைக்கிறது. இதில் M என்பது நீதி மற்றும் நெறிமுறைகளைக் குறிக்கும்(Moral and Ethical Systems). A என்பது கடமைப் பொறுப்புள்ள நிர்வாகத்தைக் குறிக்கும் (Accountable Governance). N என்பது தேசத்தின் இறையாண்மையைக் குறிக்கும் (National Sovereignty). Aஎன்பது எளிதில் அணுகக் கூடியதையும், அனைவரையும் உள்ளடக்கியத்தையும் குறிக்கும் (Accessible and Inclusive). V என்பது சரிபார்க்கக் கூடியது மற்றும் சட்டப்பூர்வமானது (Valid and Legitimate) என்பதைக் குறிக்கும். இந்தியாவின் மானவ் என்ற தொலைநோக்குப் பார்வை 21-ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவால் செயல்படும் உலகில் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான முக்கிய இணைப்பாக மாறும்.

சில பத்தாண்டுகளுக்கு முன் இணையதளம் தொடங்கிய போது, எவ்வளவு வேலைவாய்ப்புகளை அது உருவாக்கும் என்று யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அதே உண்மை இன்று செயற்கை நுண்ணறிவுக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் என்ன வகையான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை இப்போதே முன் உணர்ந்து கூறுவது சிரமமாகும். இருப்பினும், எதிர்காலத்தில் மனிதர்களும், நுண்ணறிவு கருவிகளும் இணைந்து பணியாற்றும் நிலை ஏற்படும். செயற்கை நுண்ணறிவு அதிக புத்திசாலித்தனமாகவும், அதிக திறனோடும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்” என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

“ஏஐ துறையில் இந்தியா பார்ப்பது அச்சத்தை அல்ல... எதிர்காலத்தையே!” - பிரதமர் மோடி
திமுக - தேமுதிக கூட்டணி முதல் ‘ஆட்சியில் பங்கு’ விவகாரம் வரை: பிரேமலதா கூறியது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in