மோடி - ட்ரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க் இணைந்ததாக வெளியான தகவலுக்கு இந்தியா மறுப்பு

மோடி - ட்ரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க் இணைந்ததாக வெளியான தகவலுக்கு இந்தியா மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்கும் கலந்து கொண்டதாக வெளியான தகவலுக்கு இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துளளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், ‘நாங்கள் அந்த செய்தியைப் பார்த்தோம். மார்ச் 24 அன்று நடந்த தொலைபேசி உரையாடல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் இடையே மட்டுமே நடந்தது. ஏற்கெனவே கூறியதுபோல், அது மேற்காசியாவின் நிலைமை குறித்த கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நரேந்திர மோடி - டொனால்டு ட்ரம்ப் இடையேயான தொலைபேசி உரையாடலில் கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இணைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. எனினும், எலான் மஸ்க் என்ன பேசினார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இரு நாட்டு தலைவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடலில் அரசாங்க தொடர்பு இல்லாத ஒரு தனி நபர் இணைவது பேசுபொருளானது. இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், ‘‘அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடியுடன் ஒரு சிறந்த உறவு உள்ளது. மேலும், இது ஒரு பயனுள்ள உரையாடலாக இருந்தது’’ என்று தெரிவித்தார். அதேநேரத்தில், அந்த உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரதமர் மோடி​யுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் ஆலோசனை நடத்​தியது குறித்து இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “பிரதமர் மோடி​யுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் பேசி​னார். மேற்கு ஆசிய நில​வரம் குறித்து இரு​வரும் ஆலோசித்தனர். ஹார்​முஸ் ஜலசந்தியை திறப்​பது குறித்​தும் இருவரும் ஆலோ​சனை நடத்​தினர்” என்று தெரி​வித்​திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘அதிபர் ட்ரம்ப்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியா நிலவரம் குறித்து இருவரும் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். மேற்கு ஆசியாவில் பதற்றத்தைத் தணித்து உடனடியாக அமைதியை ஏற்படுத்த இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. ஒட்டுமொத்த உலகத்துக்காகவும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அமைதி முயற்சி தொடர்பாக இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

மோடி - ட்ரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க் இணைந்ததாக வெளியான தகவலுக்கு இந்தியா மறுப்பு
மேற்கு ஆசிய பதற்றம்: அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in