மேற்கு ஆசிய பதற்றம்: அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச விமான நிலைய திறப்பு விழா

நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச விமான நிலைய திறப்பு விழா

Updated on
2 min read

நொய்டா: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும், என்றும் அதற்கு 140 கோடி மக்களின் கூட்டு முயற்சி அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு ஆசிய போர் பதற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், “இதுபோன்ற சமயங்களில் அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதை தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய வேண்டும். இதற்கு 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியும் ஒற்றுமையும் அவசியம். நேரத்தைச் சேமித்து செலவுகளைக் குறைப்பதன் மூலம் மக்களின் வசதியை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமை.

தற்போதைய உலகளாவிய நெருக்கடியை நாம் அமைதியாகவும் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். இது ஒரு உலகளாவிய நெருக்கடி. ஆனால், நாம் இந்தியாவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுவே நமது மிகப் பெரிய பலம்.

தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு மாநில முதல்வர்களுடனும் விரிவான மற்றும் நேர்மறையான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இதுபோன்ற சமயங்களில் அரசியல் கட்சிகள், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்கள் பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதை தவிர்க்க வேண்டும். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளைக் கூறுபவர்கள் அரசியல் விவாதங்களில் சில வெற்றிகளைப் பெறலாம். ஆனால், அத்தகைய பேச்சுக்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்களால் ஏற்படும் சவால்களை இந்தியா முழு பலத்துடன் எதிர்கொண்டு வருகிறது. தனது குடிமக்களைப் பாதுகாக்க நாடு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை இந்தியா சார்ந்திருக்கிறது. இந்த சுமை குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் மீது விழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சாமானிய மக்களும் மலிவு விலையில் விமானப் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்வதிலும், விமான நிலைய உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சாதாரண குடும்பங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் விமானப் பயணம் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் உதான் திட்டத்தை தொடங்கினோம்.

கடந்த சில ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 1.6 கோடிக்கும் அதிமான மக்கள் மலிவு விலையில் விமானப் பயணம் செய்துள்ளனர். சமீபத்தில் ரூ.29,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் சிறிய நகரங்களில் புதிய விமான நிலையங்களை உருவாக்கவும் சுமார் 200 ஹெலிபேடுகளை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச விமான நிலைய திறப்பு விழா</p></div>
யுடிஎஃப் தலைவர் சதீசன் 2001, 2006-ல் தேர்தல் வெற்றிக்காக ஆர்எஸ்எஸ் ஆதரவை நாடியதாக ஆர்.வி.பாபு குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in