இந்திய எல்லையில் சீனா சட்டவிரோத ஆக்கிரமிப்பு: மத்திய அரசு கடும் கண்டனம்

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

Updated on
1 min read

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் சில இடங்களில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா சட்டவிரோதமாக உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சீனா 1963 முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். 

இது குறித்துப் பேசிய அவர், "சீனாவின் இறையாண்மையை இந்தியா என்றும் எந்த வகையிலும் மீறியதில்லை. ஆனால் சீனாவின் நடவடிக்கைகள் அப்படி அமையவில்லை. இறையாண்மை குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டிய சூழல் உருவானால், அதில் நியாயமான கவலைகளை எழுப்ப வேண்டிய உரிமையும் தகுதியும் சீனாவுக்கு அல்ல, இந்தியாவுக்குத்தான் உள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் சீனா பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது; இதற்கு இந்தியா தொடர்ந்து தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது" என்று தெரிவித்தார்.

1963-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்த இந்திய நிலப்பரப்பான சாக்ஸ்கம் பள்ளத்தாக்கின் 5,180 சதுர கிலோமீட்டர் பரப்பளவைச் சீனாவுக்கு விட்டுக் கொடுத்தது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் முழுமையாகவும் பிரிக்க முடியாதபடியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதால், இந்த 1963 ஒப்பந்தத்தை இந்தியா தொடக்கத்திலிருந்தே சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது என நிராகரித்து வருகிறது.

மேலும், சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் பில்லியன் டாலர் மதிப்பிலான சீன - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகவே செல்கிறது. சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும் பாகிஸ்தானின் கவாடர் துறைமுகத்தையும் இணைக்கும் இத்திட்டத்திற்கு இந்தியா தனது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. 

<div class="paragraphs"><p>வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்</p></div>
“போராட்டம் குறித்த என் கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in