ஈரான் பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்

ஈரான் பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்
Updated on
1 min read

தெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற முந்தைய அறிவுறுத்தலை தூதரகம் மீண்டும் வலியுறுத்துகிறது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. இதையடுத்து, இஸ்ரேலும் ஈரான் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மத்திய அரசு இந்த பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், “இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு தரப்பினரும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய விரும்புகின்றனர்.

அறியாமை அல்லது முட்டாள்தனம் குறுக்கிடாத பட்சத்தில் அமைதிக்கான இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, (ஹார்மூஸ் ஜலசந்தி) முற்றுகை முழு வீச்சில் தொடர்ந்து அமலில் இருக்கும். துரிதமான நடவடிக்கைகள் வேண்டும்” என தெரிவித்துள்ளார்

ஈரான் பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்
“அரசின் தவறான கொள்கைகளை இண்டியா கூட்டணி கூடுதல் வலுவுடன் எதிர்க்க வேண்டும்” - கார்கே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in