புதுடெல்லி: “மத்திய அரசின் தவறான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் இண்டியா கூட்டணி கூடுதல் வலிமையுடன் எதிர்க்க வேண்டும்” என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் தொடங்கியது. கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “இந்த கூட்டணி 3 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. மோடி அரசின் தீய நோக்கங்களைக் கொண்ட தொகுதி மறுவரையறை மசோதாக்களைத் தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டோம்.
கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மக்களவையில் நாம் நமது ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மிக தீர்க்கமான முறையில் வெளிப்படுத்தினோம். இப்போது, மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் அரசியல், பொருளாதாரம், சமூகம், வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றில் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், நாம் அதேபோன்ற உணர்வை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் தடையின்றி தொடர்கின்றன. அரசியல் எதிரிகளை துன்புறுத்தவும், அச்சுறுத்தவும், மிரட்டவும் புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பாஜக அல்லாத அரசுகளுக்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்கின்றன. பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தேவையான புதிய முதலீடுகள் வர வேண்டிய வேகத்தில் வரவில்லை. பல துறைகளில் தனியார் ஏகபோகம் வளர்ந்து வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் எதிர்காலம் கடும் நெருக்கடியில் உள்ளது.
தேர்வு முறைகளில் நிலவும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைகளும் லட்சியங்களும் பாழாக்கப்படுகின்றன. சமூகத்தின் நலிந்த பிரிவினர் மீதான கொடுமைகள் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தடையின்றி தொடர்கின்றன. நமது வெளிநாட்டுக்கொள்கை முற்றிலும் சமரசம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்தியா நீண்ட காலமாக உறுதியாக ஆதரித்து வந்த விழுமியங்கள் தற்போது பின்பற்றப்படுவதில்லை” என குற்றம் சாட்டினார்.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், தீபங்கர் பட்டாச்சார்யா, சந்தோஷ் குமார், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புரட்சிகர சோசலிச கட்சியின் எம்பி பிரேமசந்திரன் உள்ளிட்டோர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.