சூரிய மின் உற்பத்தியில் முன்னணி நாடு இந்தியா: ஐ.நா. பருவநிலை மாற்ற தலைவர் சைமன் ஸ்டீல் தகவல்

சூரிய மின் உற்பத்தியில் முன்னணி நாடு இந்தியா: ஐ.நா. பருவநிலை மாற்ற தலைவர் சைமன் ஸ்டீல் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா தற்போது சூரிய மின் உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ளது என ஐ.நா பருவநிலை மாற்றத் திட்டத்துக்கான நிர்வாக செயலாளர் சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.

அவர் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. திறமையான தொழிலாளர்களுடன் பசுமை எரிசக்தி உற்பத்தியில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியடைந்துள்ளது.

சூரியமின்சக்தி உற்பத்தியில் முன்னணி நாடாக மாறியுள்ளது. இதுதான் புதைபடிம எரிபொருட்களிலிருந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு இந்தியா விரைவாக மாறியதற்கு முக்கிய காரணம்.

2014-ல் இருந்ததைவிடத் தற்போது சூரிய மின்சக்தி திறன் 50 மடங்கு அதிகரித்துள்ளதால் இந்தியா இத்துறையில் முன்னணி நாடாக உள்ளது. பசுமை எரிசக்தி உற்பத்திக்கான இந்தியாவின் நடவடிக்கைகள், திட்டமிட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்குகளைக் கடந்துள்ளது.

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறனில், பசுமை மின்சக்தி பாதியாக உள்ளது. இதற்கான பெருமை மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களையே சேரும்.

சூரிய மின்சக்தி மற்றும் இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருந்ததன் மூலம், இந்தியா கடந்த ஆண்டில் மட்டும் 18 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் புதைபடிம எரிபொருள் கொள்முதல் செலவை மிச்சப்படுத்தியுள்ளது.

இங்கு நிறுவப்படும் ஒவ்வொரு சோலார் பேனலும், சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் திடீர் விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து பொருளாதாரத்தைப் பாதுகாத்து, உண்மையான எரிசக்தி சுதந்திரத்துக்கு இந்தியாவை கொண்டு செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சூரிய மின் உற்பத்தியில் முன்னணி நாடு இந்தியா: ஐ.நா. பருவநிலை மாற்ற தலைவர் சைமன் ஸ்டீல் தகவல்
டெல்லியில் திரளும் ஜென்ஸீ இளைஞர்களும், சிஜேபி போராட்ட தாக்கமும் - ஓர் அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in