

புதுடெல்லி: அமெரிக்கா அல்லது சீனாவை பின்பற்றாமல் உண்மையான தேவைக்காக இந்தியா கட்டமைப்புகளை உருவாக்குகிறது என தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார்.
சிஐஐ அமைப்பின் வருடாந்திர கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலதிபர் அதானி பங்கேற்று பேசியதாவது: இந்தியா பின்பற்றும் வழி அமெரிக்கா அல்லது சீனாவின் வழியாக இருக்காது. ஒரு கற்பனையான எதிர்காலத்துக்காக நாம் எதையும் உருவாக்குவதில்லை. இந்தியாவின் தேவைக்காக நாங்கள் அனைத்தையும் உருவாக்குகிறோம். மக்களின் தேவைகள் அதிகரிக்கின்றன. நகரங்கள், தொழிற்சாலைகள் விரிவடைந்து வருகின்றன.
வாகனங்கள் மின்மயமாகி வருகின்றன. லட்சக்கணக்கான சிறு நிறுவனங்கள் வளர்ச்சிக்காக காத்திருக்கின்றன. இவற்றுக்காக இந்தியாவில் தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நாம் எதை உருவாக்கினாலும், அதற்கான தேவை இங்கு ஏற்கெனவே உள்ளது என்பதே நம் பலம். அந்தத் தேவைக்கு ஏற்ப நமது கட்டமைப்பை மேம்படுத்துவது நமது கடமை. எரி சக்தித் துறையில் இந்தியா வியக்கத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
மார்ச் 2026 நிலவரப்படி, இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 500 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது. இந்தத் திறனில் 53% கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தத் திறனை மேலும் 4 மடங்கு அதிகரித்து, 2047-க்குள் 2,000 ஜிகாவாட்டாக உயர்த்த இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது சாதாரன முன்னேற்றம் அல்ல. இது நாட்டை முன்னேற்றும் செயல்பாடு.
ஒரே நேரத்தில் அதிவேக வளர்ச்சி, தொழில்மயமாக்கல், பிரம்மாண்டமான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அர்த்தமுள்ள வகையில் கார்பன் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறாம். இந்த வளர்ச்சி கதைக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி பாதையே சிறந்த உதாரணமாக உள்ளது. சுதந்திரத்துக்குப்பின் இந்தியா 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற 67 ஆண்டுகள் ஆனது. ஆனால், அடுத்த 2 டிரில்லியன் டாலர்களைச் சேர்க்க வெறும் 12 ஆண்டுகளே ஆனது.
இங்கு சாலை, துறைமுகம், விமான நிலையம், தொழிற்சாலை, எரிசக்தி உற்பத்தி மையங்கள் மற்றும் தரவு மையம் ஆகியவை அடுத்த கட்ட வளர்ச்சியைத் தூண்டுகின்றன. இது ஒரு நாட்டின் கூட்டு வலிமை. இந்த வேகத்தில் சென்றால், இந்தியா வளர்சியடைந்த நாடாக மாறும். இந்தியாவில் ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்பட்டு டேட்டா விலை குறைந்தது. இதேபோல் செயற்கை நுண்ணறிவும் (ஏஐ) ஒரு எழுச்சியை உருவாக்கும். ஆனால் இந்த எழுச்சிக்கு அதிக மின்சாரம் தேவைப்படும்.
2030-க்குள் 5 ஜிகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் தரவு மையத் திறன் 2047-க்குள் சுமார் 75 ஜிகாவாட்டாக உயரக்கூடும். அதற்கு இந்தியா இப்போதே தயாராக வேண்டும். செயற்கை நுண்ணறிவின் வரவு, தொழிலாளர்களை நீக்கும் என உலகளாவிய கருத்து நிலவுகிறது. இதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். உற்பத்தித் திறனைப் பெருக்கி, புதிய வேலைகளை உருவாக்கும் மற்றும் சிறு வணிகங்களை வலுப்படுத்தும் சக்தியாக இந்தியா ஏஐ-யை கட்டமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.