ஈரான் விவகாரம் | “சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்” - ராகுல் காந்தி

நாட்டை வழிநடத்த உறுதியான தலைமை தேவை என கருத்து
ஈரான் விவகாரம் | “சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்” - ராகுல் காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: ‘‘நாட்டை வழி நடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவின் தன்னாட்சியை ஒப்படைத்துவிட்ட சமரசம் செய்து கொண்ட பிரதமர்தான் நமக்கு உள்ளார்’’ என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இலங்கை அருகே இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க்​கப்​பல் மீது அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் நடத்திய தாக்​குதலில் அதில் இருந்த 87 வீரர்​கள் உயிரிழந்தனர். இந்தக் கப்​பல் இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்​டுப் பயிற்​சி​யில் பங்​கேற்​றது. பயிற்சி முடிந்து ஈரானுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இந்த போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 2,000 மைல் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு கொடூரச் செயலை நிகழ்த்தியுள்ளது. இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த டேனா (Dena) என்ற போர்க்கப்பல், சர்வதேச கடல் பகுதியில் எச்சரிக்கையின்றி தாக்கப்பட்டது. அதில் சுமார் 130 கடற்படையினர் இருந்தனர்.

என் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: அமெரிக்கா உருவாக்கிய இந்த முன்னுதாரணத்துக்காக அந்த நாடு கடுமையாக வருந்த வேண்டிய நிலை வரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘‘உலகம் தற்போது அதிர்வுகளால் நிரம்பிய ஒரு கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.

இந்தியாவின் எண்ணெய் விநியோகம் ஆபத்தில் உள்ளது. நமது இறக்குமதிகளில் 40%-க்கும் மேற்பட்டவை ஹோர்முஸ் நீரிணை வழியாக நடப்பவை. அந்த பாதை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.

இந்த மோதல் நம் வீட்டின் (நாட்டின்) வாசலுக்கே வந்துவிட்டது. இந்தியப் பெருங்கடலில் ஓர் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் இதுவரை எதையும் கூறவில்லை.

இப்படிப்பட்ட நேரத்தில், நாட்டை வழிநடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவை. ஆனால் அதற்கு பதிலாக, இந்தியாவின் மூலோபாய தன்னாட்சியை ஒப்படைத்து சமரசம் செய்து கொண்ட பிரதமர்தான் நமக்கு உள்ளார்’’ என தெரிவித்துள்ளார்.

ஈரான் விவகாரம் | “சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்” - ராகுல் காந்தி
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in