நாட்டில் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு விளக்கம்

‘அச்சம் வேண்டாம்’ என பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக  மத்திய அரசு விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும், பெட்ரோல், டீசல், எல்பிஜி-க்கு எந்த பற்றாக்குறையும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெட்ரோல், டீசல், எல்பிஜி-க்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அவை வழக்கம்போல் இயங்கி வருகின்றன. பெட்ரோல், டீசல் விற்பனையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

உலகின் நான்காவது பெரிய சுத்திகரிப்பு நாடான இந்தியா, பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் 5-வது பெரிய நாடாக உள்ளது. உள்நாட்டில் எரிபொருள் கிடைப்பதை அமைப்பு ரீதியாக உறுதி செய்துள்ளதுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை வழங்கி வருகிறது.

கச்சா எண்ணெயை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களாக மாற்றும் நாட்டின் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் 100 சதவீதத்துக்கும் அதிகமான பயன்பாட்டுத் திறனுடன் இயங்கி வருகின்றன.

அடுத்த 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ளன. விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் இல்லை.

இந்தியாவிடம் மொத்தம் 74 நாட்களுக்கான கச்சா எண்ணெய் மற்றம் எரிபொருள் கையிருப்பு உள்ளது. மேற்கு ஆசிய நெருக்கடியின் 27-வது நாளில் நாம் இருக்கும் இந்த வேளையிலும், உண்மையான கையிருப்பு சுமார் 60 நாட்களுக்கு உள்ளது.

உலகளவில் என்ன நடந்தாலும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் உள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கான கச்சா எண்ணெய் கொள்முதல் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதால், அடுத்த பல மாதங்களுக்கு இந்தியா முழுமையாக பாதுகாப்பாக உள்ளது. இந்தியாவின் கையிருப்பு குறைந்துவிட்டது அல்லது போதுமானதாக இல்லை என்பது போன்ற எந்த ஒரு கூற்றும் தகுதியான அவமதிப்புடன் நிராகரிக்கப்பட வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி பதற்றங்கள் இருந்தபோதிலும், மாற்று வழிகள் மூலம் அதிக அளவிலான விநியோகம் எந்த ஒரு இடையூறும் இன்றி வந்து கொண்டிருப்பதால் கச்சா எண்ணெய் விநியோகம் நிலையாக உள்ளது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளதால் எல்பிஜி விநியோகமும் போதுமானதாக உள்ளது. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் தவறான சமூக ஊடக பதிவுகளையும், புனையப்பட்ட கூற்றுக்களையும் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டில் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக  மத்திய அரசு விளக்கம்
ஈரான் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in