

மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளின் மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.படம்: பிடிஐ
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில், இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
தலைநகர் டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு மும்பை வந்தடைந்தனர். அவர்களை விமான நிலையத்தில் மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் அதிபர் மேக்ரான் தங்கினார்.
பிரான்ஸ் அதிபரை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்றார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் சந்தித்துப் பேசினர். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத் தாயின.
இந்தியா - பிரான்ஸ் இடையிலான உறவை, ‘‘சிறப்பு சர்வதேச ராஜ்ஜிய கூட்டுறவு’’ என்ற நிலைக்கு உயர்த்துவது, இந்தியா - பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு ஆண்டு (2026), இந்தியா - பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு கூட்டமைப்பு, உட்பட21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தியாவின் டாடா நிறுவனமும் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து கர்நாடகாவின் வேமகள் பகுதியில் ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளன. இந்த ஆலையில் முதல்முறையாக எச்125 ரக ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் அதிபர் மேக்ரானும் இணைந்து காணொலி வாயிலாக இந்த ஹெலிகாப்டரை அறிமுகம் செய்தனர்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: எனது அழைப்பை ஏற்று டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் மும்பையில் அவரை வரவேற்பதில் பெருமிதம் அடைகிறேன். இந்த ஆண்டு இந்தியா - பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
இதன்படி பாதுகாப்பு, பசுமை எரிசக்தி, விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. இரு தரப்பும் இணைந்து பல்வேறு ஆராய்ச்சி மையங்களை தொடங்க உள்ளன. இந்திய - பிரான்ஸ் உறவுக்கு எல்லையே கிடையாது. இரு நாடுகள் இடை யிலான நட்புறவு கடலைவிட ஆழமானது. மலையைவிட உயரமானது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது: இந்தியா - பிரான்ஸ் இடையிலான உறவு தனித் துவமானது. இந்த உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம். இந்திய, பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, இந்திய - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங் களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
பாதுகாப்புத் துறையில் இரு நாடுகள் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. ரஃபேல் போர் விமானங்கள் முதல் நீர்மூழ்கிகள் வரை இரு நாடுகள் இடையிலான உறவு விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்தியா மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். இதன் காரணமாக எங்களது தொழில் நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறோம்.இவ்வாறு அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் எப்போது?
பிரான்ஸிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்திய விமானப் படையில் ரஃபேல் எப்3 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை 4.5-ம் தலைமுறை போர் விமானங்களாகும். புதிதாக பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் எப்4 ரக போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இவை 5-ம் தலைமுறை போர் விமானங்களாகும்.
புதிதாக வாங்கும் 114 ரஃபேல் போர் விமானங்களில் 24 போர் விமானங்கள் சூப்பர் ரஃபேல் ரகத்தைச் சேர்ந்தவை. பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான் பேச்சுவார்த்தையின் போது ரஃபேல் போர் விமானங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும், இரு நாடுகள் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.