புது டெல்லி: இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அறிவித்தார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா உடன் இருந்தார்.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று இந்தியா தனது வரலாற்றில் மிகப் பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளது. 213 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலகின் மிகப் பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம். இதன்கீழ் மக்களுக்கு உதவும் பல முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் பரஸ்பர வளர்ச்சிக்கான ஒரு வரைபடமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் எட்டு லட்சம் இந்தியர்கள் பெரிதும் பயனடைவார்கள். இன்று ஜனவரி 27, இந்த நாளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு உலகளாவிய நன்மைக்கான ஒரு கூட்டாண்மை" என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, “இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நம்பகமான கூட்டாளர்களாக ஒன்றிணைகின்றன. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை செயல்படுத்தும் வகையில் எங்கள் கூட்டாண்மையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம்.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். இன்றைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அமைதி, உரையாடல் ஆகியவற்றிற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு நாங்கள் பிரதமர் மோடியை நம்புகிறோம்.
மேலும், உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்றாக நாம் தலைமைத்துவத்தைக் காட்ட வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுதல் போன்ற துறைகளில் இந்தியா அதிக ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்றார்.
வெளிநாட்டு கார்களுக்கு தற்போது 70 முதல் 110 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வரும்போது, இறக்குமதி வரியை 40% குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பிஎம்டபிள்யூ, மெர்சிடஸ் பென்ஸ், வோக்ஸ்வேகன், ரெனால்ட் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களின் கார் விலை குறையும்.
எனினும், இதில் மின்சார வாகனங்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு சேர்க்கப்படாது. டாடா மோட்டார், மகிந்திரா போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மின்சார கார் திட்டத்தில் அதிகம் முதலீடு செய்துள்ளன. இது பாதிப்படையும் என்பதால் 5 ஆண்டுகளுக்கு பின்பு வெளிநாட்டு மின்சார கார்களுக்கும் வரி குறைக்கப்படும். இந்தியாவில் ஆண்டுக்கு 44 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன. இதில் வெளிநாட்டு கார்களின் பங்கு 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.