

புதுடெல்லி: உத்தராகண்ட்டின் ஹால்த்வானியில் ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்விஷயத்தில் உத்தராகண்ட் முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை பாஜக அவைத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உத்தராகண்ட்டின் ஹல்த்வானியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்ற எனது பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அந்த இடத்தில் ‘சுத்திகரிப்பு’ சடங்குகள் செய்யப்பட்டது குறித்து ஆகஸ்ட் 13 அன்று மிகுந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் இந்த பிரச்சினையை நான் மாநிலங்களவையில் எழுப்பியதை நீங்கள் அறிவீர்கள்.
அப்போது நீங்கள், “உண்மையிலேயே இது மிகவும் வருத்தமளிக்கும் ஒரு விஷயம். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் வருத்தமளிக்கிறது. என்ன நடந்திருந்தாலும் அது நிச்சயமாக விசாரிக்கப்படும். பாரதிய ஜனதா கட்சி இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஆதரிக்காது. நான் இதை கண்டிக்கிறேன். மேலும், தேசியத் தலைவரும் இதை ஆழமாக விசாரிப்பார். உங்கள் உணர்வுகள் காயப்படுத்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது” என்று கூறினீர்கள்.
விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீங்கள் கூறியிருந்தீர்கள். மாநிலங்களவை தலைவரும் இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தச் சம்பவம் நடந்து 24 நாட்கள் ஆகியும், இந்த இழிசெயலில் ஈடுபட்ட அமைப்பு மற்றும் தனிநபர்கள் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த ‘சுத்திகரிப்பு’ செயல்முறை தீண்டாமையுடன் தொடர்புடையது என்றே பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. மஹத் இயக்கத்தின் போது அம்பேத்கர் குளத்தில் இருந்து தண்ணீர் குடித்ததால், சாதி கர்வம் நிறைந்த மக்கள் பசுவின் சிறுநீரையும் சாணத்தையும் ஊற்றி மந்திரங்களை உச்சரித்துத் தூய்மைப்படுத்தும் சடங்கைச் செய்தனர். வெறும் மந்திரங்களை உச்சரிப்பதோ அல்லது ஹோமம் செய்வதோ சாதியை தூய்மைப்படுத்தும் செயல்முறையைப் புனிதப்படுத்திவிடாது.
இந்த விவகாரம் எனது தனிப்பட்ட பொறுப்பு அல்லது பதவியை கடந்தது என்பதையும், இதுபோன்ற கொடூரங்களை தினசரி எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் பற்றியது என்பதையும் நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவது அவசியம். எனவே, இந்தக் கோபம் என்னுடையதல்ல. இது கோடிக்கணக்கான மக்களின் வெளிப்பாடு. இது சமூகத்தின் ஒரு பிரிவினரை நேரடியாகப் பாதிக்கும் ஒரு மனநிலை சார்ந்த பிரச்சினை. அதனால்தான் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த விவகாரத்தை நான் சபையில் எழுப்பினேன்.
எனவே, மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில், ஹல்த்வானியில் நடைபெற்ற ‘சுத்திகரிப்பு’ சம்பவத்தில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு உத்தராகண்ட் முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என நான் உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.