

கோப்புப்படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் ரத்த சேகரிப்பு அதிகரித்து வருகிறது. ஆனாலும் ரத்த மேலாண்மையில் பல்வேறு சவால்கள் உள்ளன. இது தொடர்பான மாநில வாரியான தரவுகள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சர்வதேச அளவில் இந்தியாவும், சீனாவும் அதிகளவில் ரத்த சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் இந்தியா 1.58 கோடி யூனிட் ரத்தமும், சீனா 2.5 கோடி யூனிட் ரத்தத்தையும் சேகரித்துள்ளன. எனினும், இந்தியாவில் கடந்த 2025-ல் 17.4 லட்சத்துக்கும் அதிகமான ரத்தக் கூறுகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டில் இது 1.42 கோடி யூனிட்களாக இருந்தது. 2025-ல் உத்தரப் பிரதேசம் அதிகபட்சமாக 21.6 லட்சம் யூனிட் ரத்தத்தைச் சேகரித்துள்ளது. மகாராஷ்டிரா (18.73 லட்சம்), குஜராத் (11.82 லட்சம்), ராஜஸ்தான் (10.79 லட்சம்), தமிழ்நாடு (9.74 லட்சம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதேசமயம், ரத்தக் கூறுகள் வீணாவதிலும் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 2.40 லட்சம் ரத்தக் கூறுகள் வீணாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 1.87 லட்சம், கேரளாவில் 1.44 லட்சம், ராஜஸ்தானில் 1.21 லட்சம், தமிழ்நாட்டில் 1.09 லட்சம் ரத்தக் கூறுகள் வீணாகியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.