

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்துள்ளது குர்தல் மற்றும் கேரோட் கிராமங்கள். நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை.
இந்நிலையில், குர்தல் கிராமத்துக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ரோட்வேஸ் பேருந்து கிராமத்துக்குள் நுழைந்ததும், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் வரிசையாக நின்று, அதன் மீது மலர்களைத் தூவி, ஆரத்தி எடுத்து, மேளதாளத்துக்கேற்ப நடனமாடி வரவேற்றனர்.
பேருந்தின் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் பொதுமக்கள் தலைப்பாகை அணிவித்து, மாலை சூட்டி கவுரவித்தனர். ராஜஸ்தானின் கேக்கிரி பகுதியில் உள்ள குர்தல் மற்றும் அண்டை கிராமமான கேரோட் ஆகிய கிராமங்களுக்கு இந்தப் பேருந்தின் வருகை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பல பயனர்கள் வர்ணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேருந்து அருகிலுள்ள நகரங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.