புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி, அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாகச் செல்வார்கள் என்று இண்டியா கூட்டணியின் ஆலோசனைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆறு முக்கிய செயல் திட்டங்களை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
அதன்படி, அக்டோபர் 2 முதல் 8 வரை ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் மாவட்ட அளவில் பேரணிகள் நடத்தப்படும். அக்டோபர் 6 அன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் செல்வார்கள். அக்டோபர் இரண்டாவது வாரத்தில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் முறையிடுவார்கள்.
எதிர்க்கட்சிகளால் 5 மெகா பேரணிகள் நடத்தப்படும். நவம்பர் 1 அன்று டெல்லியில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும். சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து தீர்க்குமாறு இண்டியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்” என தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி கூறுகையில், “குறைபாடுள்ள எஸ்ஐஆர் மூலம் வாக்குத் திருட்டு நடந்தது. பாஜக சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கிறது. இப்போது என்னால், வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தலமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், அவருக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
ராகுல் காந்தி கூறும்போது, “இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பாதுகாவலர்களாக எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளார்கள். அவர்கள் நாட்டில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவார்கள்” என தெரிவித்தார்.
தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பாதுகாக்க அதிகாரிகள் விதிகளை மாற்றி அமைத்தனர். இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உற்று நோக்கினால் அவை அனைத்தும் மோசடியாகவே நடந்துள்ளன” என குற்றம் சாட்டினார்.
இந்த போராட்டத்தை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற இடதுசாரி கட்சிகள் விரும்புவதாக சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்தார். “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத பெரிய, நடுத்தர, சிறிய கட்சிகள் மட்டுமின்றி, கலைஞர்கள், எழுத்தாளர்கள், கலாச்சார ஆளுமைகள் ஆகியோருடன் இணைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க நாங்கள் விரும்புகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.
இண்டியா கூட்டணியின் இந்தக் கூட்டத்தை திமுக, ஆம் ஆத்சி கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.