இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு

இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
Updated on
1 min read

ஆக்லாந்து: இந்தியாவும் நியூசிலாந்தும் முக்கிய துறைகளில் நீண்ட காலத்துக்கு ஒன்றாக இணைந்து செயல்படுவது என்றும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க, அதாவது ரூ.35,000 கோடியாக உயர்த்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (ஜூலை 10) நியூசிலாந்து சென்றடைந்தார். அங்கு அவரை அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லகசன் விமான நிலையத்துக்கே வந்து ஆரத்தழுவி வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் தங்கள் தூதுக்குழுவினருடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்தியாவும் நியூசிலாந்தும் முக்கிய துறைகளில் நீண்ட காலத்துக்கு ஒன்றாக இணைந்து செயல்படுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவது, அதாவது ரூ.35,000 கோடியாக உயர்த்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து ஆண்டு கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘இந்தோ - பசிபிக் பிராந்தியம் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். சுதந்திரமான, திறந்த, வளமான பிராந்தியத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறை ஆகியவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக 1982-ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி, கடற்பயணம் மற்றும் வான்வழிப் பயணத்தில் சுதந்திரத்தையும், கடலின் பிற சட்டப்பூர்வ பயன்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று இரு பிரதமர்களும் அழைப்பு விடுத்தனர்.

சமச்சீரான, விரிவான, பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இந்த ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வருவதையும், திறம்பட செயல்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய இணைந்து செயல்பட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, பிரதமர் லக்சன் ஆகியோர், அங்கு மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து கவலை தெரிவித்தனர். அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை எதிர்த்த அவர்கள், ஹார்முஸ் ஜலசந்தி வழிாக கப்பல் போக்குவரத்து முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மோதலுக்கு அமைதியான, நிரந்தரமான தீர்வை எட்ட பேச்சுவார்த்தை, ராஜதந்திரம், சர்வதேச சட்டங்களை கடைப்பிடித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் துணிச்சலான, பயனுள்ள சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்திய அவர்கள், பாதுகாப்பு சபையை விரிவுபடுத்துவதற்கான தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
“இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஊக்கமளிக்கிறது” - நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in