புதுடெல்லி: இந்தியாவின் அணு மின்சார உற்பத்திக்கு யுரேனியம் வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக கடந்த பிப்.27-ம் தேதி இந்தியா வந்தார். அவரது இந்த பயணத்தின் கடைசி நாளான இன்று, பிரதமர் மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார்.
இந்தs சந்திப்பின்போது, பிரதமர் மோடியும், பிரதமர் கார்னியும் இரு நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா - கனடா இடையேயான ஒத்துழைப்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்த அவர்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, அணு மின்சார உற்பத்திக்கான யுரேனியத்தை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கு கனடா யுரேனியத்தை வழங்கும். கனிம வளத் துறையில் ஒத்துழைப்பு உட்பட பல ஒப்பந்தங்களில் இரு தரப்பும் கையெழுத்திட்டன.
பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ‘‘பிரதமர் மார்க் கார்னியை இந்தியாவில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமராக இது அவரின் முதல் இந்தியப் பயணம். இதை நாங்கள் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதுகிறோம். கடந்த ஆண்டு கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், அவர் என்னையும் எனது பிரதிநிதிகள் குழுவையும் அன்புடன் வரவேற்றார். இன்று அதே உளமார்ந்த நட்புடன் அவரை வரவேற்பது எனக்குப் பெருமை.
எங்கள் முதல் சந்திப்பிலிருந்தே, இருநாட்டு உறவுகளில் புதிய உற்சாகம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆற்றல் ஏற்பட்டுள்ளது. ஒத்துழைப்பு காரணமாக அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் முன்னேற்றத்துக்கான புகழை எனது நண்பர் பிரதமர் கார்னி அவர்களுக்கு அளிக்கிறேன்.
இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மதிப்புகளில் உறுதியான நம்பிக்கை கொண்டவை. மனிதகுல நலன் எங்கள் பொதுவான நோக்கம். இதுவே எங்களை ஒவ்வொரு துறையிலும் முன்னேற ஊக்குவிக்கிறது.
இன்று, இந்த நோக்கத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து விவாதித்தோம். 2030-க்குள் இருநாட்டு வர்த்தகத்தை 50 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவது எங்கள் இலக்கு. பொருளாதார ஒத்துழைப்பின் முழு திறனையும் வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமை. இதற்காக விரைவில் Comprehensive Economic Partnership Agreement-ஐ இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம். இது முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்’’ என தெரிவித்தார்.