

திருப்பதி: கிறிஸ்துமஸ் விடுமுறை, சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை வருவதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பதி பூதேவி காம்ப்ளக் ஸில் சர்வ தரிசன டோக்கன் வாங்க நேற்று கூட்டம் அலைமோதியது. டோக்கன் தீர்ந்து விட்டதால், மற்றொரு கவுன்ட்டரில் திவ்ய தரிசனம் டோக்கன்கள் வாங்க ஒரு கூட்டம் முண்டியடித்தது. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீஸார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் சென்று பக்தர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தினர்.
கடந்த ஆண்டு இதே வைகுண்ட ஏகாதசிக்கு தரிசன டோக்கன்கள் வாங்க ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 6 பக்தர்கள் இறந்தனர். அது போன்ற சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்பதில் தேவஸ்தானத்தினரும், போலீஸாரும் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் தரிசனத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதல் 3 நாட்கள் வரை டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவர்.
அதன் பின்னர் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதிவரை டிக்கெட்டுகள் இல்லாவிட்டாலும் பக்தர்கள் சர்வதரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானஅறங்காவலர் பிஆர் நாயுடு தெரிவித்தார். மேலும், லட்டு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா என லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் இடத்தில் திடீர் ஆய்வும் மேற்கொண்டார்.
கடந்த 24-ம் தேதி புதன்கிழமையன்று திருப்பதி ஏழுமலையானை மொத்தம் 73,524 பக்தர்கள் தரிசித்துள்ளனர். இதில் 29,989 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். உண்டியலில் ரூ.4.88 கோடி காணிக்கை செலுத்தியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.