

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகர், கிரிராஜ்பேக் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மி சவீதா. இவர் பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை அஜய் சங்கர் தினக்கூலியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு வருமான வரித் துறை சார்பில் ரேஷ்மிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ரூ.20.98 கோடி வருவாயை மறைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் வருமான வரித் துறை மற்றும் உத்தர பிரதேச காவல் துறையில் ரேஷ்மி புகார் மனுக்களை அளித்திருக்கிறார். இதுகுறித்து ரேஷ்மி கூறியதாவது:
எனது வாழ்நாளில் ரூ.20,000-ஐ கூட மொத்தமாகப் பார்த்தது கிடையாது. ஆனால் எனது ஆதார், பான் கார்டை பயன்படுத்தி ரூ.20.98 கோடிக்கு பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளன. எனது ஆதார் எண், பான் எண்ணைப் பயன்படுத்தி டெல்லியில் உள்ள ஒரு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு உள்ளது.
எனது ஆவணங்களைப் பயன்படுத்தி டெல்லி புராரி பகுதியில் ஆர்எஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் 2025-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தொடங்கப்பட்டு, கடந்த 2025-ம் ஆண்டு மே 9-ம் தேதி மூடப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தின் மோசடிக்கு எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.