ஈரான் போர் தாக்கம்: 3 கேள்விகளுக்கு பதில் அளிக்க பிரதமர் மோடிக்கு கார்கே வலியுறுத்தல்

ஈரான் போர் தாக்கம்: 3  கேள்விகளுக்கு பதில் அளிக்க பிரதமர் மோடிக்கு கார்கே வலியுறுத்தல்
Updated on
2 min read

புதுடெல்லி: மேற்காசிய போரின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றிய நிலையில், இந்த விவகாரத்தில் மூன்று அடிப்படை கேள்விகளுக்கு தெளிவான பதில்களை எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய 20 நிமிட உரை, உண்மையை மறைக்கும் ஒரு முயற்சியாகவே இருந்தது. மூன்று அடிப்படைக் கேள்விகளுக்கு நாங்கள் தெளிவான பதில்களைக் கோருகிறோம்.

முதலாவதாக, பிரதமர் தனது நிலையற்ற, ஊசலாடும் ராஜதந்திர நிலைப்பாட்டால் நாட்டின் சுயாட்சியின் சமநிலையை மாற்றியுள்ளார் என்பது தெரிகிறது. பிரதமரின் சமீபத்திய இஸ்ரேல் பயணத்தால், இந்தியா வெளிப்படையான ராஜதந்திர விளைவுகளைச் சந்தித்துள்ளது.

இந்த வெளிப்படையான நிலை மாற்றம் விஷயத்தில் நாடாளுமன்றம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையைப் பெறுவதில் பிரதமர் ஏன் தோல்வியடைந்தார்? இந்தியாவின் சுதந்தரமான வெளியுறவுக் கொள்கையை மீட்டெடுக்க எத்தகைய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

இரண்டாவதாக, இந்தியக் கொடியுடன் பயணிக்கும் சுமார் 37-40 கப்பல்கள் ஏறத்தாழ 1,100 கப்பல் பணியாளர்களுடனும் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான சரக்குகளுடனும் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கின்றன.

பிரதமர், ஈரானிய அதிபருடன் தனிப்பட்ட முறையில் இரண்டுமுறை பேசிய பிறகும், வெளியுறவுத் துறை அமைச்சர் தனது ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இந்தியா தனது கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடத்தைப் பெறுவதில் ஏன் தொல்வி அடைந்தது? இந்திய கப்பல்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடகளுக்கு மட்டும் எப்படி பாதுகாப்பான போக்குவரத்து வசதி வழங்கப்படுகிறது?

மூன்றாவதாக, இந்தியா தனது எரிசக்தி இறக்குமதியை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளுக்கு விரிவுபடுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அப்படியென்றால், தற்போது எந்தெந்த நாடுகள் இந்தியாவுக்கு எல்பிஜி, எல்என்ஜி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை எந்த அளவில் வழங்குகின்றன?

மிக முக்கியமாக, 41 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் ஏன் இன்னும் பற்றாக்குறை, நீண்ட வரிசை, கள்ளச்சந்தை, கடுமையான விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்?

மோதல் தொடங்கி இப்போது 25 நாட்கள் ஆகிவிட்டன. இந்தியா ஓர் ஆழமான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதற்கு அரசாங்கம் இன்னும் சிறப்பாக தயாராக இருந்திருக்க வேண்டும். பிரதமர் இப்போது இந்த சூழ்நிலையை கரோனா போன்றது என்று ஒப்பிட்டுள்ளார். பெருந்தொற்றின்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையும், எண்ணற்ற மக்கள் ஆக்ஸிஜன் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடியதையும் தேசம் மறக்காது.

நாடு தீவிரமடைந்து வரும் எரிசக்தி நெருக்கடியையும், அதோடு உணவு, உரம், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், 140 கோடி இந்தியர்கள் மீண்டும் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இப்போது பிரதமர் கூறுகிறாரா? பிரதமரின் இந்த அறிக்கை மிகவும் தாமதமாக வந்துள்ளதுடன், பதில்களை விட கேள்விகளையே அதிகம் எழுப்புகிறது’’ என தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் தாக்கம்: 3  கேள்விகளுக்கு பதில் அளிக்க பிரதமர் மோடிக்கு கார்கே வலியுறுத்தல்
“சாத்தியமான அனைத்து வழிகளிலும் எரிபொருள் பெற முயற்சி” - மாநிலங்களவையில் பிரதமர் மோடி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in