

புதுடெல்லி: சாத்தியமான அனைத்து வழிகளில் இருந்தும் எரிவாயு, கச்சா எண்ணெயைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அதை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று (மார்ச் 23) மக்களவையில் விளக்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாநிலங்களவையில் விளக்கினார்.
அப்போது அவர், ‘‘மேற்கு ஆசியாவில் போர் தொடங்கி மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த போர் உலக அளவில் ஒரு தீவிர எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கும்கூட இந்த நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது. இந்த போர் வர்த்தக பாதைகளைப் பாதித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்களின் வழக்கமான விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர், பணிபுரிகின்றனர். அவர்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் பாதுகாப்பு அளிப்பது இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும்.
ஹார்முஸ் ஜலசந்தியில் பல கப்பல்கள் சிக்கி உள்ளன. அந்த கப்பல்களில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர். இதுவும் இந்தியாவுக்கு பெரும் கவலை அளித்து வருகிறது. இத்தகைய கடினமான சூழ்நிலையில், இந்தியாவின் மேலவை அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஒன்றுபட்ட குரலை எழுப்புவது முக்கியம்.
இதுவரை 3,75,000 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். ஈரானில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்பியுள்ளனர். இவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மாணவர்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் நமது அரசு முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நாடுகளும் உறுதியளித்துள்ளன.
எனினும், இந்த தாக்குதல்களில் சில இந்தியர்கள் உயிரிழந்ததும், சிலர் காயமடைந்ததும் துரதிருஷ்டவசமானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
பெரும்பாலான மேற்கு ஆசிய நாடுகளுடன் நான் இரண்டுமுறை பேசியுள்ளேன். அனைத்து வளைகுடா நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் இப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதே எங்கள் இலக்கு. பதற்றத்தைத் தணிப்பது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்தும் நாங்கள் அவர்களுடன் பேசியுள்ளோம்.
வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற ஒரு சர்வதேச கடல்வழியில் ஏற்படும் தடைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பொதுமக்கள், பொதுமக்கள் வாழும் கட்டிடங்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா எதிர்த்துள்ளது.
இந்த போர்க் காலத்திலும் இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் இந்தியாவுக்கு எண்ணெய் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும். கடந்த சில நாட்களில் கச்சா எண்ணெய், எல்பிஜி ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு பல கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. இதேபோன்ற முயற்சிகள் வரும் நாட்களிலும் தொடரும்.
எண்ணெய், எரிவாயு, உரம் அல்லது வேறு முக்கிய பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்தியாவை பாதுகாப்பாக வந்தடைவதை உறுதி செய்வதே இந்தியாவின் முயற்சிகளாக இருந்து வருகின்றன. ஆனால், போரினால் ஏற்படும் உலகளாவிய சூழ்நிலைகள் நீண்ட காலம் நீடித்தால், அது கடுமையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
கடந்த சில ஆண்டுகளில் தனது மீள்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை இந்தியா மேலும் வேகப்படுத்துகிறது. இந்தியாவிடம் போதுமான கச்சா எண்ணெய் சேமிப்பு வசதியும், தொடர்ச்சியான விநியோகத்துக்கான ஒரு அமைப்பும் உள்ளது என்பதை நான் இந்த அவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 11 ஆண்டுகளில் 53 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் இருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 65 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் வர்த்தகத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை வெளிநாட்டு கப்பல்கள் மூலமே நடைபெறுகின்றன. உலகளாவிய நெருக்கடி ஏற்படும் சூழலில், இந்த நிலை இந்தியாவின் நிலையை இன்னும் தீவிரமானதாக மாற்றுகிறது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்களை கட்டுவதற்காக சுமார் ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
தற்போதைய நெருக்கடி ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையுமே உலுக்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள இழப்பில் இருந்து மீண்டு வர உலகுக்கு நீண்ட காலம் பிடிக்கும். இந்தியாவின் மீது இதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமது பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. அடிக்கடி மாறி வரும் சூழ்நிலைகளை அரசாங்கம் கூர்மையாக கவனித்து வருகிறது. இதன் குறுகிய கால, நடுத்தர கால, நீண்ட கால தாக்கங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் வியூகத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கம் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழு தொடர்ந்து கூடி நமது இறக்குமதி - ஏற்றுமதி வர்த்தகத்தில் எழும் அனைத்து பிரச்சினைகளையும் ஆய்வு செய்து வருகிறது. தேவையான தீர்வுகளைக் கண்டறிவதிலும் இக்குழு ஈடுபட்டு வருகிறது.
நேற்று 7 அதிகாரமிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. விநியோகச் சங்கிலி, பெட்ரோல், டீசல், எரிவாயு, பணவீக்கம், பிற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட விஷயங்களில் விரைவான மற்றும் தொலைநோக்குச் சிந்தனையுடன் உத்திசார்ந்து இக்குழுக்கள் செயல்படும். கூட்டு முயற்சிகளின் மூலம் நாம் இந்த சூழ்நிலையைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்’’ என தெரிவித்தார்.