“வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நம்முள் ராமரை எழுப்ப வேண்டும்” - பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி

Updated on
2 min read

அயோத்தி: “வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் விரும்பினால், நம்முள் ராமரை நாம் எழுப்ப வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயில் கோபுர உச்சியில் காவிக்கொடி ஏற்றும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் இணைந்து காவிக்கொடியை கோயில் உச்சியில் ஏற்றினர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், "இந்தக் கொடி சாதாரண கொடி அல்ல. இது இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் சின்னம். இந்த கொடியில் உள்ள காவி நிறம், சூர்யவம்சத்தின் குறியீடு, ஓம் எனும் எழுத்து, கோவிதாரா மரம் ஆகியவை ராம ராஜ்ஜியத்தின் புகழை பறை சாற்றுகின்றன. இது ஒரு தீர்மானம், இது ஒரு வெற்றி, இது உருவாக்கத்தின் போராட்டக் கதை, 100 ஆண்டுகால போராட்டத்தின் வடிவம்.

வர இருக்கும் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு இந்தக் கொடி, பகவான் ராமரின் மதிப்புகளைப் பறைசாற்றும். உண்மையே தர்மம். பாகுபாடோ வலியோ இருக்கக்கூடாது. அமைதியும் மிகழ்ச்சியுமே இருக்க வேண்டும். ஏழ்மையோ, உதவியற்ற நிலையே ஒருபோதும் இருக்கக்கூடாது.

ஒருவரால் கோயிலுக்குள் வர முடியாவிட்டாலும் அவர் வெளியில் இருந்தவாறு கோயில் கொடியை வணங்கினாலே அவர் கோயிலுக்கு வந்ததன் பலனைப் பெறுவார் என்கின்றன நமது புராண நூல்கள். தொலைதூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்தக் கொடி, ராமர் பிறந்த இடத்தை குறிக்கும். அதோடு, ராமரின் கட்டளைகளையும் உத்வேகங்களையும் அனைத்து மனித குலத்துக்கும் தெரிவிக்கும்.

ராமர் கோயில் கட்டுமானத்தில் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் கடுமானப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளி, கைவினைஞர், கட்டிட கலைஞர், தொழிலாளி என அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உணர்ச்சிகளின் மூலம் ராமர் நம்மோடு இணைகிறார். அவரிடம் எந்த வேறுபாடும் இல்லை. அவருக்கு முக்கியம் பக்திதான், பரம்பரை அல்ல. அவர் ஒத்துழைப்பை மதிக்கிறார், அதிகாரத்தை அல்ல. தற்போது நாம் இதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்.

கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியின் மையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 2047ல் இந்தியா தனது சுதந்திர தினத்தின் 100-ம் ஆண்டை கொண்டாட உள்ளது. அதற்குள் நாம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க வேண்டும். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.

நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நிகழ்கால சந்ததியினர் குறித்து சிந்திப்பது போலவே, எதிர்கால சந்ததியினர் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில், நாம் இல்லாதபோதும் இந்த நாடு இருந்தது, நாம் இல்லாதபோதும் நாடு இருக்கும்.

நாம் ஒரு துடிப்பான சமூகம். நாம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும். வர இருக்கும் 10 ஆண்டுகளையும் நூற்றாண்டுகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நாம் பகவான் ராமரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், அவரது ஆளுமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரது நடத்தையை நாம் உள்வாங்க வேண்டும்.

ராமர் என்பது ஒரு நபர் அல்ல. அவர் ஒரு மதிப்பு. 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க விரும்பினால், நாம் நமக்குள் ராமரை எழுப்ப வேண்டும். இதற்கான தீர்மானத்துக்கு இந்த நாளைவிட சிறந்த நாள் எதுவாக இருக்க முடியும்.

நாம் நமது அடையாளத்தை இழக்கும்போது நாம் நம்மை நாமே இழக்கிறோம். நாடு முன்னேற வேண்டுமானால், அது அதன் பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்பட வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயம், அடிமை மனநிலையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். 190 ஆண்டுகளுக்கு முன்பு, 1835ம் ஆண்டு, மெக்காலே என்ற ஆங்கிலேயர் இந்தியாவை அதன் வேர்களில் இருந்து பிடுங்குவதற்கான விதைகளை விதைத்தார்.

மெக்காலே இந்தியாவில் அடிமைத்தனத்துக்கு அடித்தளமிட்டார். இன்னும் 10 ஆண்டுகளில், அந்த மோசமான நிகழ்வு 200 ஆண்டுகளை நிறைவு செய்யும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு, இந்தியாவை அடிமைத்தன மனநிலையில் இருந்து விடுவிப்பதை இலக்காகக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்" என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி</p></div>
அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in