

அயோத்தி: அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோயிலின் கோபுர உச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் இணைந்து காவிக்கொடியை ஏற்றினர்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் கோபுர உச்சியில் கொடியேற்றும் திருவிழா இன்று நடைபெற்றது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அயோத்தி சென்றார். அவரை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அயோத்தி ராமர் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோரின் ஏழு கோயில்களுக்குச் சென்று பிரதமர் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, சேஷாவதார் கோயிலுக்கும், அன்னபூர்ணா தேவி கோயிலுக்கும் சென்ற பிரதமர், பின்னர் குழந்தை ராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அவருடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் இணைந்து வழிபாடு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சேர்ந்து, பத்து அடி உயரமும், இருபது அடி நீளமும் கொண்ட காவிக்கொடியை கோயில் கோபுர உச்சியில் ஏற்றினர். இந்த கொடியில், ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் ஆகியவை பொறிக்கப்பட்டிருந்தன.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவை முன்னிட்டு, அயோத்தியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாலைகள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு, நகரம் காவிக் கொடிகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பிரதான பால ராமர் கோயிலுடன் சிவன், விநாயகர், அனுமன், சூரியன் உள்ளிட்டோருக்கான துணை கோயில்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.