‘‘காங்கிரஸ் நிலைப்பாட்டில் இருந்து நான் ஒருபோதும் விலகியதில்லை’’ - சசி தரூர்

‘‘காங்கிரஸ் நிலைப்பாட்டில் இருந்து நான் ஒருபோதும் விலகியதில்லை’’ - சசி தரூர்
Updated on
2 min read

வயநாடு: காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து தான் ஒருபோதும் விலகியதில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கேரள சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான வியூகங்களை வகுப்பதற்கான ‘லட்சியம் 2026’ முகாம் வயநாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சசி தரூர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ‘‘காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து தான் ஒருபோதும் விலகியதில்லை. நான் விலகியதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி. பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நான் கருத்து தெரிவித்த போதிலும் பெரும்பாலானவற்றில் கட்சியும் நானும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.

முழு உள்ளடக்கத்தையும் படிக்காமல் தலைப்புச் செய்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் விவாதிப்பதால்தான் பெரும்பாலும் சர்ச்சைகள் எழுகின்றன. நான் என்ன எழுதினேன் என்பதை படித்தீர்களா என்று கேட்டால், பெரும்பாலானோர் படிக்கவில்லை என்றே கூறுகின்றனர். முழுமையாக படித்தால்தான், உண்மை புரியும். நான் 17 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். கட்சியினருடன் நல்லுறவை பேணி வருகிறேன். தவறான புரிதல் ஏற்பட இப்போது எந்த அவசியமும் எழவில்லை.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்ட பிறகுதான் இந்த பிரச்சினைகள் தொடங்கினவா என கேட்கிறீர்கள். கட்சி ஜனநாயக மரபுகளைப் பின்பற்றுகிறது. கடந்த காலங்களில் பல தலைவர்கள் உட்கட்சித் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். நான் போட்டியிட்டேன்; தோற்றேன். அத்துடன் அது முடிந்துவிட்டது. அதில் வேறு எதையும் நான் காணவில்லை.

பாஜக மூத்த தலைவர் அத்வானியை நான் பாராட்டிப் பேசினேன். அவரது 98-வது பிறந்த நாளை முன்னிட்டு நான் பாராட்டினேன். இது மரியாதை நிமித்தமான ஒரு செயல். நமது கலாச்சாரம் பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொடுக்கிறது. அதைத்தான் நான் செய்தேன். நான் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதாகக் கூறுகிறீர்கள். நான் அவரை எங்கே புகழ்ந்தேன் என்பதை கூறுங்கள். முழு பதிவையும் படித்தால், அதில் அப்படி எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும். 100 இடங்களுக்கு மேல் எங்கள் அணி வெற்றி பெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறி இருக்கிறார். இது சாத்தியமானதே. முதல்வர் வேட்பாளரைப் பொருத்தவரை, தகுதியான பலர் இருக்கிறார்கள். ஆனால், எங்கள் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாநில அரசியலில் நான் தீவிரமாக ஈடுபடுவேனா என கேட்கிறீர்கள். நாடாளுமன்றப் பணிகள் இருந்தாலும் நான் மாநிலத்தில் தொடர்ந்து செயல்படுகிறேன். 2021ல் கோவிட் பெருந்தொற்று காலத்திலும்கூட நான் 56 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தேன். இந்த முறை இன்னும் அதிக தொகுதிகளில் எனது பிரச்சாரம் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்’’ என தெரிவித்தார்.

‘‘காங்கிரஸ் நிலைப்பாட்டில் இருந்து நான் ஒருபோதும் விலகியதில்லை’’ - சசி தரூர்
‘‘நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதால் கியூபா விரைவில் வீழும்’’ - ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in