

புதுடெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பாக நாடாளுமன்ற அவைகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோஷம் எழுப்பி வருகின்றன.
நான் இதை ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். மூத்த தலைவர் சோனியா காந்தி உட்பட எனது கட்சித் தலைவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். கட்சியில் நான் மட்டுமே குரல் கொடுப்பவராக இருக்கலாம். ஆனால் மக்கள் என்னை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவே தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நாடாளுமன்ற அவையில் வெறும் கூச்சலிடவும், சலசலப்பை ஏற்படுத்தவும் அவர்கள் என்னை இங்கு தேர்ந்தெடுத்து அனுப்பவில்லை. என் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தேசத்துக்காகவும், அவர்களுக்காகவும் பேச அவர்கள் என்னை அனுப்பியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தருணங்களில் புகழ்ந்து பேசி வருகிறார். இது காங்கிரஸ் மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியநிலையில் இதைக் கண்டிக்கும் விதமாக அவர் பேசியுள்ளது காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.