டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா |கோப்புப் படம்
புது டெல்லி: “காற்று மாசுபாட்டுக்காக டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். எந்த ஒரு அரசாங்கமும் ஒன்பது முதல் பத்து மாதங்களுக்குள் மாசுபாடு அளவை முழுமையாகக் குறைப்பது சாத்தியமற்றது” என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.
டெல்லியில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டு மிகவும் கடுமையான நிலையில் உள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “டெல்லி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்த ஒரு அரசாங்கத்தாலும் ஆட்சியமைத்த 9-10 மாதங்களுக்குள் காற்று மாசுபாட்டின் அளவை முழுமையாகக் குறைப்பது சாத்தியமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தை விட நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். மேலும் ஒவ்வொரு நாளும் காற்றின் தரக்குறியீடு அளவு AQI-ஐ குறைத்துள்ளோம். இந்த காற்று மாசுபாடு என்ற நோயை ஆம் ஆத்மி கட்சிதான் நமக்கு கொடுத்தது, அதைச் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அவர் கூறினார்.
டெல்லியில் இன்று (செவ்வாய்) காலை 8 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 378 ஆகப் பதிவு செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவிலேயே உள்ளது. எனவே நகரம் முழுவதும் உள்ள மக்கள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளால் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று டெல்லியில் ஏக்யூஐ 498 ஆக இருந்ததிலிருந்து இன்று கணிசமான அளவு குறைவான ஏக்யூஐ பதிவாகியுள்ளது.