“ராகுல் காந்தி அரசியல் ரீதியாக என்னிடம் இருந்து தொலைவில் இருக்கிறார்” - மணி சங்கர் ஐயர்

மணி சங்கர் ஐயர் | கோப்புப் படம்

மணி சங்கர் ஐயர் | கோப்புப் படம்

Updated on
2 min read

புதுடெல்லி: காந்தி, நேரு, ராஜிவ் ஆகியோரின் கொள்கைகளை தான் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ள மணி சங்கர் ஐயர், ஆனால் ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை தன்னிடம் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்த சர்வதேச கருத்தரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் ஐயர், ‘‘முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் இதைச் சொல்கிறேன். அவர் மீண்டும் முதல்வராக வருவார் என நான் உறுதியாக நம்புகிறேன். மிகச் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலமாக கேரளா திகழ வேண்டும் என்ற எனது கோரிக்கையை அவரிடம் முன்வைக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று பேசிய மணி சங்கர் ஐயர், தான் ராகுல் காந்தியை பின்பற்றவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை தன்னிடம் இருந்து மிக தொலைவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ‘‘எனக்கு ஆறு வயது, எனது தம்பிக்கு 4 வயது இருக்கும்போது மகாத்மா காந்தி எங்கள் இருவரையும் தனது கைகளில் தூக்கிக் கொண்டு, இவர்கள் எனது கண்களின் சந்திரன் சூரியன் போன்றவர்கள் என கூறினார். அங்கிருந்து நான் காந்தியவாதி ஆனேன்.

நேருவைப் பொறுத்தவரை, அவர் பிரதமரானபோது எனக்கு வயது ஆறு. அவர் மறைந்தபோது எனக்கு வயது 23. எனது இளமைக்காலத்தில் நான் நேருவின் நெறிமுறைகளில் மூழ்கி இருந்தேன். அந்த வகையில் நான் நேருவின் கொள்கைகளைப் பின்பற்றுபவனாகவே நான் என்னைக் கருதுகிறேன். ராஜீவ் காந்தியின் கொள்கைகளை பின்பற்றுபவன் என்றும் நான் என்னை கருதுகிறேன். அவர் என்னைவிட இரண்டு வயது இளையவர். என்றாலும், அவர் பிரதமர் அலுவலகத்துக்கு என்னை கொண்டு வந்து அவர் செய்யும் பல வேலைகளை என்னை செய்ய வைத்து ஆச்சரியப்படுத்தியவர். அதனை என்னால் நம்பமுடியவில்லை. அப்படித்தான் நான் ராஜீவ் காந்தியைப் பின்பற்றத் தொடங்கினேன்.

இந்திரா காந்தியை பின்பற்றுபவன் என்று நான் என்னைச் சொல்ல மாட்டேன். ஏனெனில், நாட்டில் அவசர நிலையைக் கொண்டு வந்து நமது ஜனநாயகத்தை கொடுங்கோன்மையாக மாற்றியவர் அவர். அவரது அந்த செயலை நான் நிச்சயமாக நான் ஏற்க மாட்டேன்.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவர் என்னைவிட 30 வயது இளையவர். அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை. நான் எப்படி ராகுல் காந்தியை பின்பற்றுபவராக இருக்க முடியும்? அதோடு, அவரது அரசியல் ரீதியாக அவரது வாழ்க்கை என்னிடம் இருந்து மிகவும் தொலைவில் இருக்கிறது’’ என்று மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக மணி சங்கர் ஐயர் தெரிவிக்கும் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தி அளிப்பதாக இருக்கிறது. அவரது கருத்துகள் கட்சியின் கருத்துகள் அல்ல என்றும் அவை அவரது தனிப்பட்ட கருத்துகள் என்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>மணி சங்கர் ஐயர் | கோப்புப் படம்</p></div>
ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை: அமெரிக்க குற்றச்சாட்டுக்கு ரஷ்யா விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in