

புதுடெல்லி: அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி, மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடுகிறது. இங்கு திரிணமூல் கட்சியிலிருந்து விலகி ஆம் ஜனதா உன்னையன் கட்சி (ஏஜேயுபி) என புதிய கட்சி தொடங்கியுள்ள ஹுமாயூன் கபீருடன் ஏஐஎம்ஐஎம் இம்முறை கூட்டணி அமைத்துள்ளது. முர்ஷிதாபாத் எம்எல்ஏவான இவர் அப்பகுதியில் பாபர் மசூதி கட்டி வருவதால் பிரபலமாகி வருகிறார்.
இதுகுறித்து ஒவைசி கூறுகையில், “மேற்கு வங்கத்தில் 2016-ல் பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் இருந்தனர். அது தற்போது 77 ஆக உயர்ந்துள்ளது. இங்கு பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க சகோதரர் ஹுமாயூன் கபீருடன் இணைந்து போட்டியிடுகிறோம்" என்றார்.
ஹுமாயூன் கபீர் கூறுகையில், "அண்ணன் ஒவைசி எடுக்கும் ஒவ்வொரு முடிவு மற்றும் வழிகாட்டுதலின்படி நான் முன்னேறிச் செல்வேன். இந்தக் கூட்டணி ஒருபோதும் முறியாது. வரும் காலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தல்களையும் இணைந்து எதிர்கொள்வோம்” என்றார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முதல் முஸ்லிம்களின் முக்கியத் தலைவரும் எம்எல்ஏவுமான நவுஷாத் சித்திக்கீயின் இந்திய மதச் சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்) கட்சி, மம்தாவுக்கு தலைவலியாக நீடிக்கிறது. இந்தக் கட்சியுடன் ஹுமாயூன் கபீர் கட்சி ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் சுமார் 30% உள்ளனர். மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் சுமார் 114 இடங்களில் முஸ்லிம்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கின்றன.
முஸ்லிம்களின் ஆதரவு, அம்மாநிலத்தை 15 வருடங்களாக ஆட்சி புரியும் மம்தாவுக்கு பெரும் உதவியாக உள்ளது. அவரது வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஒவைசியுடன் ஹுமாயூன் அமைத்த கூட்டணி மம்தாவை சிக்கலில் தள்ள வாய்ப்பாக உள்ளது.
இத்துடன், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணியும் முதல்வர் மம்தாவுக்கு சிக்கலை உருவாக்கி விட்டது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள சுமார் 100 தொகுதிகளில் பல லட்சம் வாக்காளர்கள் தற்போது சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால், அரசியல் சமன்பாடுகள் வேகமாக மாறி வருகின்றன.