இந்து திருமணத்துக்கு பதிவு மட்டுமின்றி சடங்குகளும் அவசியம்: குஜராத் உயர் நீதிமன்றம்

இந்து திருமணத்துக்கு பதிவு மட்டுமின்றி சடங்குகளும்  அவசியம்: குஜராத் உயர் நீதிமன்றம்
Updated on
2 min read

அகமதாபாத்: இந்து திருமணத்துக்கு அக்னியை சுற்றி வரும் சப்தபதி உள்ளிட்ட வழக்கமான சடங்குகள் மற்றம் சம்பிரதாயங்கள் அவசியம் என்றும், பதிவு செய்வதால் மட்டும் இந்து திருமணம் செல்லுபடியாகும் என்று கருத முடியாது என்றும் குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கவுஷல் சோனார் என்பவர் தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில் இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கவுஷல் சோனார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவில், “நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். அகமதாபாத்தில் வசிக்கும் பெண் ஒருவர் எனது பெற்றோரைச் சந்தித்து, அவருக்கும் எனக்கும் சட்டப்படி திருமணம் நடந்துவிட்டதாகக் கூறி அதற்கான திருமணச் சான்றிதழை வழங்கினார். அப்போதுதான், இது குறித்து எனக்குத் தெரியவந்தது. எதிர்வாதியான அந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்து முறைப்படியான சடங்குகள் எதையும் செய்யவில்லை. கணவராக அவருடன் வாழவில்லை. திருமண ஆவணங்களில் எனது கையெழுத்து சுய விருப்பமின்றி மோசடியாகப் பெறப்பட்டது. இருந்தும், எங்களுக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்க குடும்ப நல நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, இந்த திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இலேஷ் வோரா, ஆர்.டி.வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், “இரு தரப்பினருக்கும் இடையே திருமணச் சடங்குகள் எதுவும் நடக்கவில்லை என்பதையும் இருவரும் கணவன் - மனைவியாக வாழவில்லை என்பதையும் எதிர்வாதியான பெண், குடும்ப நல நீதிமன்றத்தில் தெளிவாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததன் மூலம் குடும்ப நல நீதிமன்றம் தவறிழைத்துள்ளது.

இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 7, திருமணத்தை முழுமையானதாகவும் சட்டப்படி கட்டுப்படுத்துவதாகவும் மாற்றுவதற்கு சப்தபதி (அக்னியை வலம் வருதல்) போன்ற வழக்கமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி இந்து திருமணத்தை நடத்துவது அவசியம் என்று கூறுகிறது. திருமணச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் எதுவும் நடைபெறாததால் ஓர் இந்து திருணத்துக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய அம்சம் இந்த வழக்கில் இல்லை.

இந்து மரபில், மனைவி கணவனின் சரிபாதியாகக் கருதப்படுகிறார். அதேவேளையில் அவர் தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட ஒரு தனிநபராகவும், திருமணத்தில் சம பங்கு கொண்டவராகவும் அங்கீகரிக்கப்படுகிறார். இந்து சட்டத்தின்படி திருமணம் என்பது ஒரு புனிதச் சடங்காகவோ அல்லது சம்ஸ்காரமாகாவோ கருதப்படுகிறது. இது ஒரு புதிய குடும்பத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமைகிறது.

இந்து திருமணம் என்பது ஒரு புனிதச் சடங்கு. இந்திய சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த புனிதச் சடங்குக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். எனவே, திருமண பந்தத்தில் இணைவதற்கு முன் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த திருமண அமைப்பைப் பற்றி கவனமாகச் சந்திக்க வேண்டும் என்றும் இந்திய சமூகத்தில் இதன் புனிதத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

திருமணம் என்பது பாடல், நடனம், விருந்து உபசரிப்பு ஆகியவற்றுக்கான ஒரு நிகழ்வு மட்டுமல்ல. இது ஒரு வணிக ரீதியான பரிவர்த்தனையும் அல்ல. மாறாக, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உறவில் இணைந்து எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரு புனிதமான நிகழ்வு.

திருமணம் புனிதமானது. ஏனெனில், இது இரு நபர்களுக்கு இடையே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், கண்ணியமான, சமமான, பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய ஆரோக்கியமான பிணைப்பை உருவாக்குகிறது. குறிப்பாக, சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் முறையாகச் செய்யப்படும்போது, ஒரு தனிநபர் முக்தி அல்லது பேரின்பத்தை அடைய உதவும் நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது. புவியியல் மற்றும் கலாச்சார ரீதியிலான வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த மரபுசார் சடங்குகள் ஒரு தனிநபரின் ஆன்மைாவை தூய்மைப்படுத்துகின்றன என்று நம்பப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து திருமணத்துக்கு பதிவு மட்டுமின்றி சடங்குகளும்  அவசியம்: குஜராத் உயர் நீதிமன்றம்
அருணாச்சலப் பிரதேச மழை வெள்ளத்தால் 4 பேர் உயிரிழப்பு; 90,000-க்கும் மேற்பட்டோர் பரிதவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in