

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முதல்வர் பெமா காண்டுவுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகவும் ஆய்வு செய்தனர்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிழக்கு சியாங் மாவட்டத்தின் பாசிகாட் பகுதியை ஆய்வு செய்த இவர்கள், பின்னர் போயிங் கிராமத்துக்குச் சென்று சேதங்களை மதிப்பிட்டனர். இந்த கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. நெல் வயல்கள், பயிர்கள், கால்நடைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் பல குடும்பங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
வீடுகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்த கிராம மக்களுடன் மத்திய அமைச்சர்கள் கலந்துரையாடினர். அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், மாநில நிர்வாகத்துடன் இணைந்து மத்திய அரசு நிதி மற்றும் கட்டமைப்பு உதவிகளை அளிக்கும் என உறுதியளித்தார். போயிங் கிராமத்தில் வெள்ள நீரைத் தடுக்க தற்காலிக சுவர் அமைத்த கிராம மக்களின் செயல்பாட்டை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்ந்து லோயர் சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள யசாலியில் வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்தது. நீப்கோ குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த குடும்பத்தினரைச் சந்தித்து அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆறுதல் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை விரைவாக வழங்கும் என்றும் தெரிவித்த அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 28 மாவட்டங்களில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 90,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட அப்பர் சியாங் மாவட்டத்தில் 47,357 பேரும், சியாங் மாவட்டத்தில் 23,715 பேரும், கிரா தாடி மாவட்டத்தில் 8,171 பேரும், கிழக்கு காமெங் மாவட்டத்தில் 5,895 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் கெயி பன்யோர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான். உடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.
அருணாச்சலப் பிரதேச ஆய்வை முடித்துக்கொண்ட மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஆகியோர், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அண்டை மாநிலமான அசாமுக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். வான் மற்றும் தரை வழியாக ஆய்வுகளை மேற்கொண்ட அவர்கள், சேதங்களை மதிப்பிட்டு முடித்த பிறகு மத்திய தலைமையிடம் அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.