“நேபாள வெள்ளப் பெருக்கு பிரச்சினைக்கு அதி முக்கியத்துவம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

“நேபாள வெள்ளப் பெருக்கு பிரச்சினைக்கு அதி முக்கியத்துவம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
Updated on
1 min read

புதுடெல்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் திபெத்தை ஒட்டிய நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், விடுதிகள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் என பல்வேறு கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடியபோதிலும், சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். வீடுகளுக்குள் இருந்தவர்களும் வீட்டோடு அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 469 பேர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வெள்ளப் பெருக்கில் இந்தியர்கள் பலரும் சிக்கி உள்ளனர். அவர்களை கண்டறியும் பணிகளை இந்திய வெளியுறவுத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா இதுவரை இரண்டு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.

இந்நிலையில், நேபாள வெள்ள பாதிப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, வெளியுறவுத் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேபாளத்தில் தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இன்று விவாதிக்கப்பட்டது. காத்மாண்டு மற்றும் பீஜிங்கில் உள்ள நமது தூதரகங்கள், அங்குள்ள இந்தியக் குடிமக்களின் நிலை மற்றும் நல்வாழ்வு குறித்த தகவல்களை வழங்கியுள்ளன.

நேபாளத்துக்கு அனுப்பப்படவுள்ள கூடுதல் நிவாரணப் பொருட்கள் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்புடைய பிரிவுகள் எங்களுக்குத் தெரிவித்தன. இப்பிரச்சினைக்கு நாங்கள் அதி முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, 117 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 85 பேர் இந்தியர்கள், 16 பேர் சீனாவை சேர்ந்தவர்கள், 9 பேர் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த இருவர், இத்தாலியைச் சேர்ந்த இருவர், அடையாளம் தெரியாத மூவர் ஆகியோர் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

நேபாளத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் உருவான பெரிய தடுப்பு ஏரி இன்று (வெள்ளிக்கிழமை) உடைந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் புதிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

“நேபாள வெள்ளப் பெருக்கு பிரச்சினைக்கு அதி முக்கியத்துவம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
“சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் குறித்து கோவா சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும்” - முதல்வர் சாவந்த் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in