“சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் குறித்து கோவா சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும்” - முதல்வர் சாவந்த் தகவல்

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

Updated on
1 min read

பனாஜி: சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்ட மசோதா முதலில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படட்டும் என்றும் அதன் பிறகு அது குறித்து விவாதிப்போம் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கோவாவில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, ஆகஸ்ட் 31-ம் தேதி கூட உள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா மாநில அரசின் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “இந்த மசோதா முதலில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படட்டும். அதன் பிறகு நாம் அது குறித்து விவாதிப்போம். இப்போதே ஏன் விவாதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அது மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சுயேச்சை எம்எல்ஏ அலிக்சோ ரெஜினால்டோ லோரென்கோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மசோதா விவரம்: கோவா அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ‘கோவா சட்டவிரோத மதமாற்ற தடுப்பு மசோதா 2026’, பலவந்தம், வற்புறுத்தல், செல்வாக்கு, கவர்ச்சி, மோசடி வழிகள், திருமணம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மத மாற்றத்திற்கு கடுமையான தண்டனையை முன்மொழிகிறது.

இந்த மசோதாவின் கீழ், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். மேலும், குறைந்தபட்சம் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படலாம். அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் இந்த மசோதா முன்மொழிகிறது.

முன்மொழியப்பட்ட மசோதா, மத மாற்றத்திற்காக மட்டுமே திருமணம் செய்யப்பட்டது என்பது கண்டறியப்பட்டால் அதை "செல்லாதது" என்று அறிவிக்க வகை செய்கிறது.

குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

18 வயதுக்கு உட்பட்டவர், மாற்றுத்திறனாளிகள், பெண், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக மதமாற்றம் செய்தால் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதத்துடன் 5 முதல் 14 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டவிரோத மதமாற்றத்தை தடை செய்யும் நோக்கில் சட்டம் இயற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்</p></div>
நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in