

பெங்களூரு: ஆங்கில புத்தாண்டு (ஜன.1) கொண்டாட்டங்கள் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதனால் பப், கிளப் போன்ற கேளிக்கை விடுதிகள், மதுபான கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை நள்ளிரவு 3 மணி வரை திறந்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில், மாநகர பேருந்து ஆகியவை நள்ளிரவு 3 மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாநகரம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு பாலியல் தொல்லை சம்பவங்களை தடுக்க 164 இடங்களில் உதவி மையங்களும், 10 ட்ரோன் கேமராக்களும், 5 ஆயிரம் சிசிடிவி கேமிராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 2,600 போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரை பிடிக்க 1000 இடங்களில் போலீஸார் பாதுகாப்பு வளையங்கள் அமைத்துள்ளனர்.
முதல்வர் ஆலோசனை: கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறுகையில், “மது குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் இருப்பவர்கள் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்கள் ஓய்வெடுக்க 15 இடங்களில் ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் குடித்துவிட்டு நடக்க முடியாதவர்களை, அவர்களின் முகவரியை கேட்டு பத்திரமாக வீட்டில் இறக்கிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், பெண்கள், வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.