மத்திய பட்ஜெட்டில் சுகாதார அமைச்சக நிதி ஒதுக்கீடு 10 சதவீதம் அதிகரிப்பு
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு ரூ.1 லட்சத்து 6,530.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2025-26-ம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவை ஒரு முதன்மை மருத்துவ சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்காக, தனியார் துறையுடன் இணைந்து 5 பிராந்திய மருத்துவ மையங்களை அமைப்பதில் மாநிலங்களுக்கு உதவி செய்யும் ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த மையங்கள் மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை கொண்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களாக செயல்படும் என்று அமைச்சர் நிர்மலா தனது பட்ஜெட் உரையில் கூறினார். துணை சுகாதாரப் பணியாளர்களுக்கான தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
“இது கண் மருத்துவம், கதிரியக்கவியல், மயக்க மருந்து, அறுவை சிகிச்சை தொழில்நுட்பம், அப்லைடு சைக்காலஜி உள்ளிட்ட 10 துறைகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் துணை சுகாதாரப் பணியாளர்களை உருவாக்கும்” என்று அவர் கூறினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 6,530.42 கோடியில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு ரூ.1 லட்சத்து 1,709.21 கோடியும், சுகாதார ஆராய்ச்சித் துறைக்கு ரூ.4,821.21 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக துணை சுகாதாரப் பணியாளர்களுக்கான திட்டத்துக்கு சுகாதார அமைச்சகம் ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது.
