

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தின் தார் நகரில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா கட்டிடம் உள்ளது. இந்த வளாகத்தில் இருந்த கோயிலை இடித்துவிட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, போஜ்சாலாவை கோயிலாக மாற்ற இந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், உள்ளே இருக்கும் மவுலானா கமாலுதீன் மசூதி அங்குதான் இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்பாக ம.பி. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ம.பி. உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ”போஜ்சாலா கட்டிடம் தொடர்பாக சர்ச்சை நிலவுவதால், அங்கு ஏப்ரல் 2ம் தேதிக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு செய்ய விரும்புகிறோம்” என்று தெரிவித்தனர்.
தற்போது போஜ்சாலா கட்டிடம் மத்திய அரசின் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கட்டுப்பாட்டில் உள்ளது. போஜ்சாலா கட்டிடத்தில் கோயில், மசூதி இருப்பதால் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஏஎஸ்ஐ பிறப்பித்த உத்தரவில், ”போஜ்சாலாவுக்குள் இந்துக்கள் செவ்வாய்க் கிழமை தோறும் வழிபடலாம். முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகை நடத்தலாம்” என கூறப்பட்டது.
முன்னதாக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஏஎஸ்ஐ சார்பில் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சுமார் 2,000 பக்க அறிக்கையில், ”தார் பகுதியை ஆண்ட பர்மார மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் தான் இந்த போஜ்சாலா. தற்போதைய மசூதி கட்டப்படுவதற்கு முன்னரே அங்கு கோயில் அமைந்திருந்த மிச்சங்கள் (சிற்ப துண்டுகள்) உள்ளன. அதன் இடிபாடுகளை பயன்படுத்தி இந்த போஜ்சாலா 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மறுக்காத முஸ்லிம் தரப்பு மனுதாரர் மவுலானா கமாலுதீன் நலச் சங்கத்தினர், நாடு சுதந்திரம் அடைந்த போது இருந்த நிலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அத்துடன் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991’-ஐ பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.