

நீக்கப்பட்ட காங். எம்எல்ஏ சோபியா பிர்டஷ்
புவனேஸ்வர்: ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த மன்மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பிஜு ஜனதா தளத்தில் சான்ட்ரப்ட் மிஸ்ரா வெற்றி பெற்றார். அந்த கட்சியின் மற்றொரு வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோடா தோல்வி அடைந்தார். மாநிலங்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. காங்கிரஸின் 14 எம்எல்ஏக்களில் 3 பேர் அணி மாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து ஒடிசா மாநில காங்கிரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களவைத் தேர்தலில் கொறடா உத்தரவை மீறி சோபியா பிர்டஷ், தசரத் காமங்கோ, ரமேஷ் ஜெனா ஆகியோர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இதன் காரணமாக 3 எம்எல்ஏக்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். கட்சி விதிகளின்படி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்யும்படி ஒடிசா சட்டப்பேரவைத் தலைவருக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.